செய்திகள்

2014ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் உயர்வு

புதுடெல்லி, டிச.6-

2014ம் ஆண்டுக்கு பிறகு, மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-

கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் அதிகரித்துள்ளது. எம்.பி.பி.எஸ். சீட்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-ல் இருந்து 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது. இது, 112 சதவீத உயர்வு ஆகும்.

முதுநிலை மருத்துவ இடங்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 185ல் இருந்து 70 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. இது, 127 சதவீதம் உயர்வு ஆகும்.

157 மருத்துவ கல்லூரிகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றில் 108 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:-

பெண் போலீசின் பிரதிநிதித்துவத்தை 33 சதவீதமாக உயர்த்துமாறு கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் போலீஸ் துறையில் மொத்தம் 11.75 சதவீத பெண்கள்தான் இருக்கின்றனர்.

அதே சமயத்தில், 2014ம் ஆண்டு 518 ஆக இருந்த மகளிர் போலீஸ் நிலையங்கள் எண்ணிக்கை, 2022ம் ஆண்டு 745 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் துறையில் பெண்களை ஈர்ப்பதற்காக, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா கூறியதாவது:-

கடந்த 1947-ம் ஆண்டில் இருந்து 1962-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற சொத்துகள் ‘எதிரி சொத்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை பணமாக மாற்ற 2020-ம் ஆண்டு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரைப்படி, அசையும் சொத்துகளான எதிரி சொத்து பங்குகள், ஆன்லைன் ஏலத்தில் விடப்பட்டன. அதில், ரூ.2 ஆயிரத்து 709 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *