செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை, ஜன. 27–

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கதவுகள் இன்று காலையில் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்திருந்த வழக்கு ஒன்றில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகவும் அது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வர இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் பரவியது.

இதன் காரணமாகவே கமிஷனர் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு பணிபுரியும் காவலர்கள் சிலர் தெரிவித்தனர். நேற்று இரவில் இருந்தே கமிஷனர் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பிறகு வழக்கம் போல அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அமலாக்கத்துறையினர் கமிஷனர் அலுவலகத்துக்கு ஏன் வரப் போகிறார்கள்? யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்றார். கமிஷனர் அலுவலகத்தின் கதவுகள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே மூடப்பட்டிருந்தன என்றும் அவர் விளக்கம் அளித்தார். உரிய பாஸ் இல்லாமல் பொதுமக்கள் சிலர் கமிஷனர் அலுவலக மாடிகளில் சுற்றுவதாக புகார் எழுந்தது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறைப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *