செய்திகள்

சாலை பாதுகாப்பில் நடைபாதைகளின் அவசியத்தை மறக்கலாமா?


ஆர். முத்துக்குமார்


சாலை விபத்துக்கள் நம் நாட்டில் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் மற்றும் சட்டத்துறைக்குமே மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.

அடிப்படையில் சாலை விபத்துக்களின் பின்னணியில் சாலை விதிகளை மதிக்காது உபயோகிப்பது தான் அதிமுக்கிய காரணம்!

கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனங்கள் அனுதினமும் காலை 6.30 மணிக்கே பரபரப்பாக இயங்க துவங்கி விடும். அங்குள்ள மசூதியில் இருந்து ஆற்காடு பிரதான சாலை வர மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் காரணமாக சர்க்குலர் சாலை வழியாக வந்து தான் மீண்டும் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி நுங்கம்பாக்கம் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும்! பெட்ரோல், டீசல் சிக்கனத்திற்காக மசூதியின் ஒரு வழி சட்டத்தை மீறி வாகனங்கள் சென்று மேம்பாலம் ஏறி விட்டால் வெறும் 30 மீட்டர் கூட இருக்காது!

கார்ப்பரேஷன் குப்பை அகற்றும் வாகனங்கள் முதல் கார், மினி வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எல்லாம் இப்படி அந்த ஒரு வழிச்சாலை விதியை கடைப்பிடிக்க விரும்பாமல் எதிர் திசையில் வரும் வாகனங்களையும் எளிதில் சென்று விட வழியின்றி தவிக்க வைத்து விடுவது வாடிக்கை.

போக்குவரத்துப் போலீசார் பள்ளிக்கூடம் மற்றும் உச்சபச்ச அலுவல் செல்வோர் உபயோகிக்கும் காலை, மாலை நேரங்களில் தவறாக வரும் வாகனங்களை நிறுத்தி ஒழுங்குப்படுத்துவர். ஆனால் குப்பை அகற்றும் வாகனங்களுக்கு ஏனோ விதிவிலக்கு என கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்!

சரியாக வரும் வாகனங்களுக்கே இடைஞ்சலான அந்தப் பகுதியில் சரியான சாலை விதிகளை கடைப்பிடித்தால் எல்லோரும் எரிச்சல் படாமல் உரிய இடத்திற்கு சென்று விட பல குறுகபுகுச் சந்துகள் எல்லாம் இருந்தும் அப்பகுதியில் சாலை விதிகளை மதிக்காதவர்கள் அதிகமாக இருப்பது வியப்பானது, ஆனால் நம்நாட்டில் இது சட்டம் என்றால் யாரும் அது பற்றி கவலையின்றி, வழி தான் இருக்கிறதே? என்று யோசிப்பதுதான் வாடிக்கை.

சாலை பாதுகாப்பில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று நடைபாதைகள் அல்லவா? தமிழகமெங்கும் தேவையான பிளாட்பாரங்கள் 100% போடப்பட்டிருக்கிறதா? என்று தமிழக அரசு புள்ளி விவரப் பட்டியல் எடுத்துப் பார்த்தால் பெரும் நகரங்கள் உட்பட மாநிலங்களின் பாதாச்சாரிகளுக்கான நடைபாதை வெறும் 25% கூட இருக்காது! மேலும் பாதசாரிகளுக்கான நடைபாதைகளில் தெய்வங்களுக்கு கோயில்களும் கடைகளுக்கான படிகட்டுகளும் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருப்பதால் சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பாக செல்ல பரபரப்பான சாலைகளில் மட்டுமே நடந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இவையெல்லாம் நம் நாட்டில் தவறே கிடையாது என்ற மனப்பான்மையுடன் வாழப் பழகி விட்ட நிலையில் வருங்காலத்தில் பாதாசரிகளுக்கு நடைபாதை ஏன்? என்ற விவாதம் கூட எழுந்து இனி போடவே வேண்டாமே என்று முடிவெடுத்துவிடும் அபாயமும் இருப்பதை மறந்து விடக்கூடாது.

சென்ற வாரம் துவங்கிய சாலை பாதுகாப்பு மாதம் துவக்க நாளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில் சுட்டிக் காட்டியிருப்பது

உயில் வாழ்வதற்கான மற்ற அடிப்படைத் திறன்களை போல சாலை பாதுகாப்புக் கல்வியும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம்.

சாலை விதிகளை மதித்தால் விபத்தில்லா பயணம் சாத்தியமே!!

விதிகளை மதிப்போம்!! வேதனைகளைத் தவிர்ப்போம்!!

சாலைப் பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு!!

இந்தச் சாலைப் பாதுகாப்பு கல்வியை ஆரம்ப பாட வகுப்புகளில் கட்டாயமாக்கி அவர்கள் சாலை விதிகளை புரிந்து அதைப் பின்பற்றும் நல்ல குடிமக்களாக வளர்ந்து உரிய நடவடிக்கைள் எடுத்துச் சிறந்த வரைவுத் திட்டங்களை உருவாக்கிட முதல்வர் ஸ்டாலின் முயற்சிகள் எடுத்து செயல்படுத்த வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *