செய்திகள்

பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

காசா, டிச. 03–

பாலஸ்தீன மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வசிக்கும் தெற்குக் காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.

தெற்குக் காஸாவின் சுற்று வட்டாரங்களில் மக்களை இடம்பெயர எச்சரித்து துண்டு பிரசுரங்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று வீசியுள்ளது. இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் காசாவில் வாழும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்த போதும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

15 ஆயிரம் பேர் பலி

7 வாரங்களாகத் தொடர்ந்த போர் நவம்பர் 24 முதல் 7 நாள்களுக்கு கைதிகளைப் பரஸ்பரம் விடுவிக்க இருதரப்பும் உடன்பட்டு போர் நிறுத்தம் நடைபெற்றது. மீண்டும் போர்த் தொடங்கியுள்ள நிலையில், பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துபையில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், “அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்படுகின்றனர். வெளிப்படையாக சொல்லப் போனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் காசாவில் இருந்து வருகிற புகைப்படங்களும் விடியோகளும் நிலைகுலைய வைக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றுமொரு பெரியளவிலான மக்கள் இடப்பெயர்வு ஏற்படாதிருக்க அமெரிக்கா மற்றும் ஐநா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. போர் மீண்டும் தொடங்கியது முதல் 400-க்கும் அதிகமான இலக்குகளைத் தாக்கியுள்ளது இஸ்ரேல். தெற்குக் காசாவில் 50-க்கும் அதிகமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *