செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு 22–ந்தேதி அரை நாள் விடுமுறை அறிவிப்பு

அயோத்தி, ஜன.19-–

அயோத்தி ராமர் கோவில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகளுக்கு, அன்றைய தினம் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்டமான முறையில், கலை நுட்பத்துடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மூலம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

ராமர், சீதா தேவி, லட்சுமணன் சன்னதி உள்பட 44 நுழைவு வாயிலுக்கு, 44 கதவுகள் மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் பயின்ற சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக விழாவை, உலகமே வியக்கும் வண்ணம் நடத்துவதற்கு உத்தரபிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடு களை செய்துவருகிறது.

கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ந் தேதி தொடங்கின. இந்த பூஜைகளில் 121 ஆச்சார்யார்கள் ஈடுபட்டுள்ளனர். பால ராமர் சிலை பிரதிஷ்டைக்காக, சரயு நதியில் இருந்து புனித நீர் கலசங்கள் நேற்று முன்தினம் எடுத்துவரப்பட்டன.

அந்த கலசங்கள் அனைத்தும், கோவில் வளாகத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அனுமன் மகா யாகசாலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு நேற்று கணபதி பூஜை, கலச பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. ஆச்சார்யார்கள் வேத மந்திரங்கள் ஓதி யாகம் நடத்தினர்.

இந்த பூைஜகள் அனைத்தும் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறும் என்று ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கருவறைக்குள் பால ராமர் சிலை கிரேன் மூலம் வைக்கப்பட்டது. அப்போது பக்தி கோஷம் விண்ணை பிளந்தது.

7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ்

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உள்பட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் என 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

யாகசாலை பூஜைகளை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமாேனார் வந்து குவிந்து உள்ளனர்.

கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அயோத்தி நகரம் எங்கும் ராமர் உருவம் பொறிக்கப்பட்ட காவிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. கட்டிடங்கள் அனைத்தும் காவி வண்ணம் பூசப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வீதிகளில் உள்ள சுவர்கள் அனைத்தும் ராமாயண வரலாற்றை விளக்கும் வகையிலான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சாலைகள் எங்கும் தோரணங்கள் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

கும்பாபிஷேக விழாவில் முக்கிய பிரமுகர் பலர் வருகை தரவுள்ளதால், அயோத்தி நகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரை நாள் விடுமுறை

கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் பிரதமர் மோடி ஏற்கனவே நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். எனவே இந்த கொண்டாட்டங்களில் மத்திய அரசு ஊழியர்களும் பங்கேற்பதற்கு வசதியாக மத்திய அரசு அலுவல கங்களுக்கு, கும்பாபிஷேக தினத்தில் அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும், வருகிற 22-ந்தேதி மதியம் 2.30 மணி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘அதிகமான மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதேபோல் பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் 22-ந்தேதி, அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அன்று மதியம் 2.30 மணி வரை செயல்படாது.

விளக்கேற்றி கொண்டாடுங்கள்

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை, தீபாவளியை போல் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடுங்கள்’ என்று மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 22-ந்தேதிக்கு பிறகு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களுடன் கோவிலுக்குச் செல்லுமாறு தனது அமைச்சர்களை அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *