செய்திகள்

தமிழகம் முழுவதும் தயார் நிலையில் மின்கம்பங்கள், 15,000 கி.மீ. மின் கம்பிகள், 15,000 களப்பணியாளர்கள்

அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை, டிச.3–

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள 110/11 கி.வோ. வள்ளுவர்கோட்டம் துணை மின் நிலையத்தில் உள்ள 16 எம்.வி.ஏ. உயரழுத்த மின்மாற்றியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுது நீக்கும் பணியிணை மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

கனமழை மிகப் பெரும் கனமழையாக இருந்தாலும் சரி, புயலாக நம்மைக் கடந்து சென்றாலும் அதனை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 3 லட்சம் மின் கம்பங்கள், 15,000 கி.மீ. மின் கம்பிகள் மற்றும் 15,000 களப்பணியாளர்கள் 24X7 தயார் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சர் சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் மா.ராமசந்திரன், இயக்குநர் (பகிர்மானம்) இரா.மணிவண்ணன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

இந்த புயல் காலத்தில் மக்களுக்கு சீரான மின்சாரம் எந்த இடத்திலும் தடைபடாமல் வழங்குவதற்கு வேண்டிய உத்தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறோம். மேலும், மருத்துமனைகள், குடிநீர் வழங்கல் வசதி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

அதே போல மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மின்வாரிய துறையின் அலுவலர்கள் பணியாளர்கள் களப்பணியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். 65 அழைப்புகளை

ஏற்க ஏற்பாடு

மின்வாரியத்தை பொருத்தமட்டில் மின்வாரியம் தயாராக உள்ளது. இரவு நேரங்களில் குறிப்பாக மழைக் காலங்களில் ஏற்படும் மின்தடைக்கு புகார் அளிக்க மின்னகத்தில் ஒரே நேரத்தில் 65 அழைப்புகளை ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை கண்காணிக்க தனியாக அலுவலர்களும் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி மின் சாதனங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது மின் கம்பி அறுந்து விழுந்திருந்தாலோ உடனடியாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்திற்கு 94987 94987 என்ற எண்ணிற்கோ அல்லது மின் தடை நீக்க மையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறும், பொதுமக்கள் மழைகாலங்களில் மின் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனத்துடன் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *