செய்திகள் நாடும் நடப்பும்

மழைநீர் சேமிப்பை உறுதி செய்தார் ஜெயலலிதா; சுரங்க மழை நீர் வழி கண்டு சென்னை மாநகரம் பலனடைய களம் இறங்குவாரா ஸ்டாலின்?


ஆர். முத்துக்குமார்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள்– டிசம்பர் 5–ம் தேதி, தமிழகமெங்கும் அஞ்சலி செலுத்தும் தினமாக இருந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை, டிசம்பர் 4 அன்று பெய்த வரலாறு காணாத மழைப் பொழிவின் பின்விளைவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

ஒருமுறை ஜெயலலிதா கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கையில் ஓரு பத்திரிகையாளர் அது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, சிறு நகைப்புடன் கூறிய ஓர் சொற்தொடர், ‘எனக்குத் தண்ணி ராசி உண்டு’ என்றார். அதாவது வறட்சி நீங்கி மழை பெய்யும் பாருங்கள்’’ என்பது போல் பதில் தந்தது நினைத்துப் பார்த்து இத்தலையங்கம், தமிழக உயர்வுக்கு அர்ப்பணிப்பாய் வாழ்ந்த அவருக்கு அஞ்சலியாய் உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

ஜெயலலிதா ஏற்படுத்திய ஓர் உன்னதமான புரட்சி, தமிழகம் மட்டுமின்றி தேசமே என்றும் மறந்து விடாது, அது மழை நீர் சேகரிப்பு திட்டமாகும்.

அவர் அதை தமிழகமெங்கும் கொண்டு வர எடுத்த இரும்புக்கர நடவடிக்கையை தமிழகம் மறந்து விடாது!

ரேஷன் அட்டையில் மழை நீர் சேகரிப்பு இல்லா வீடு என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால் ரேஷன் அரிசியோ, சர்க்கரையோ இதர இலவசங்களோ கிடையாது. உடனே ஏதேனும் வகையில் மழைநீரை சேகரியுங்கள் என்று ஆணித்தரமாக உத்தரவிட்டார்.

மிகவும் பிற்பகுதியில் இருக்கும் முற்புதர் காடுகளில் இருந்த கிராம வீடுகள் முதல் நகரின் ஆடம்பர பங்களா இல்லங்கள் வரை இரு மாத கெடுவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினார்.

தற்சமயம் புதுப்புது வீடுகள், குடியிருப்புகள், பல அடுக்கு மாடி வீடுகள் மழைக்கால காளானாய் பூத்துக் குலுங்கி வருவது தெரிகிறது. அங்கெல்லாம் மழைநீர் சேமிப்பு கட்டுமானமும் இருப்பது தான் நிதர்சனம்.

ஆனால் 50% அக்கட்டமைப்பு உரிய வகையில், உபயோகரமானதாக உருவாகியுள்ளதா? கண்துடைப்பு சமாச்சாரமா? என்பது விவாதத்துக்குரியதாக இருக்கலாம்.

ஆனால் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை பெருவாரியான குடும்பங்களுக்கு புரிய வைத்து விட்டார்.

அப்படி ஒரு புதிய புரட்சி திட்டத்தால் மட்டுமே அதீத மழை பொழிவால் தவிக்கும் சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு ஆதாயம்.

ஒரு ஆண்டில் உலகெங்கும் ஓர் குறிப்பிட்ட அளவு மழைப் பொழிவு இருக்கிறது, சற்றே அதிகரித்து இருக்கலாம், சில ஆண்டுகளில் குறைந்தும் இருக்கலாம்.

பூமியில் நிலப்பரப்பு 30%, மீதி 70% கடல். ஆக மழைப்பொழிவு பெருவாரியாக கடலிலும், கடற்கரைப் பகுதிகளிலும் தான் அதிகம்.

சென்னை இரு நாட்களுக்கு முன்பு பெற்ற ஒரு நாள் மழைப் பொழிவு, அதே வேகத்தில் கடற்கரையில் இருந்து 40 கிலோ மீட்டருக்கும் தள்ளி அடித்துப் பெய்திருந்தால் அது இத்தகைய சீரழிவை ஏற்படுத்தி இருக்காது என ஒரு சில மழை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடற்கரைப் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மழைப் பொழிவு காரணமாக நிலத்தில் விழும் நீரை அது விரும்பி கடலுக்குள் செல்ல வழி விடாமல் அணைப்போட்டு விடுமாம்!

அது இயற்கையில் நடைபெறும் சமாச்சாரம். தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதுபோல், ரூ.4000 கோடி செலவு செய்து சென்னை நகர கட்டமைப்பை உயர்த்தியதால் பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பதுடன் சேதாரமும் குறைவு என்று கூறியிருப்பது உண்மையில் சரி தான். மிகவும் பாராட்டப்பட வேண்டியதும் கூட!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ வீண் செலவு செய்து கணக்கு காட்டி இருக்கிறார், சரியான முறையில் திட்டமிட்டு செலவிட மறந்துவிட்டார் எனப் புகார் தெரிவித்துள்ளார். உண்மையில் அதுவும் சரியே!

நாம் இதே போன்ற மழைப் பொழிவை 1990களில் சந்தித்திருந்தால் நகர கட்டுமானம் சிதைந்தா போயிருக்கும்?!

கட்டுமானங்கள் எழுப்பப்படாமல் வெட்டவெளியாய் இருந்த நீர் நிலைகள், நீர் ஓட்டப் பாதைகளில் மழைநீர் சென்று கடலில் சங்கமித்து இருக்கும், நகரம் ‘நரகமான’ ஓர் சூழ்நிலையில் இருந்து தப்பித்து இருக்கும்!

ஆனால் ஜனத்தொகை பெருக்கத்தையும், நகரீய வேகத்தையும் கட்டுப்படுத்தவா முடியும்? ஜனத்தொகை பெருக பல அடுக்கு மாடிகளும், நீர்நிலைகளும் விளை நிலங்களும் குடியிருப்புப் பகுதிகளாக மாற இப்படி மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளப் பெருக்கில் சிக்கி தவிக்கத்தான் செய்யும்.

2016ல் கண்ட அதீத மழைப் பொழிவை 2023ல் மீண்டும் கண்டோம், சற்றே கூடுதல் மழைப் பொழிவும் இருந்தது.

ஆனால் அன்றும், இன்னும் மழைநீர் வெள்ளப் பெருக்காய் நாச வேலை செய்த பகுதிகள் என்ன?

இது பற்றிய தகவல் திரட்டு உடனடியாக உருவாக்கி ஓர் வரைபடத்தை தமிழகம் தயாரித்து வரும் கால இயற்கை சீற்றங்களை சந்தித்தாக வேண்டும்.

வளரும் பொருளாதாரமாக உயர்ந்து வரும் நம் நாட்டின் உடனடிவடிக்கைகளை உலகமே உற்றுப் பார்த்து வருவது தான் உண்மை.

குறிப்பாக சென்னை தெற்கு ஆசியாவின் பிரதான நுழைவாயிலாக பார்க்கப்படுகிறது.

ஜனத்தொகை அதிகரிப்பை உணர்ந்து அதிகமாக பங்களா இயக்கினோம், அதற்கு உதவியது உலக வங்கி அல்லவா?

பிறகு நவீன போக்குவரத்தின் அவசியம் உணர்ந்து நகரத்திற்குள் புதிதாக எம்ஆர்டிஎஸ் என்ற ‘பறக்கும் ரெயில்’ திட்டத்தையும் உருவாக்கி, அதற்கு செயல் வடிவம் தர உலக வங்கியையும் இதர சர்வதேச நிதியங்களின் நிதி முதலீட்டை பெற்றோம் அல்லவா?

2000ஆம் ஆண்டில் நுழையும் தருவாயில் கணினி துறையில் சாதித்த சென்னைக்கு மேலும் பெருகூட்டி மக்கள் சொகுசாக, விரைவாகவும் பயணிக்க ஏதுவாக ‘மெட்ரோ ரெயில்’ திட்டம் கொண்டு வந்தோம், தற்சமயம் சென்னையின் எட்டு திக்குக்கும் பயணிக்க ஏதுவாக விரிவாக்கம் செய்து வருவதையும் அறிவோம்.

இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் சிறப்பு அது தற்போதைய நகர கட்டமைப்பை மாற்றாமல் பூமிக்கு அடியில் சுரங்கப் பாதையில் செல்ல வழி கண்டோம் அல்லவா?

அதாவது அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ற பிரயாண வசதி மிக அவசியம், அதற்காக பூமிக்கு அடியில் சுரங்கமும், மேலே செல்லும் பகுதிகளில் தூண்கள் வைத்து பறக்கும் ரெயில்களாக செல்ல வழி கண்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்!

இதற்கு நாம் செய்து வரும் முதலீடுகளோ பல லட்சம் கோடிகள், அதை உலக வங்கி ஒப்புதல் தந்து முதலீடு செய்தும் வருகிறது அல்லவா?

அது மக்கள் தொகை சிக்கலை சீர் செய்ய, இனி அதே வழியில் மழை வெள்ள சிக்கலுக்கும் தீர்வு காண உறுதியாக இருப்போம்.

எந்தப் பகுதிகளில் நீர் ஓட்டம் வாரக்கணக்கில் தேங்குகிறதோ, அங்கே ஏன் சுரங்கம் அதாவது நிலத்தடியில் ராட்சத குழாய்கள் அமைத்து அந்நீர் அதன் போக்கில் புவிஈர்ப்பை சார்ந்து பயணித்து நீர்நிலைக்கு செலுத்தத் திட்டமிட வேண்டும் அல்லவா?

குறிப்பாக விமான நிலையப் பகுதி, தொழில்பேட்டை பகுதிகளில் சுரங்கங்களோ, மேம்பாலங்கள் போல் அமைக்க ராட்சத குழாய் கட்டுமானத்தை உருவாக்கினால், அதன் காரணமாக சென்றடைய கூடிய பகுதியில் மழை நீரை குடிநீராக மாற்றி நமது அன்றாட உபயோகத்திற்கும் பயன்பட வைக்கலாம்.

சென்னையை சுற்றி 150 கிலோ மீட்டருக்கு இதே குழாய்களை கொண்டு விளைச்சல் பகுதிகளுக்கு அனுப்பி விவசாய உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம்!

தற்போது நீரின்றி வறண்டு இருக்கும் நீர்நிலைகளில் சென்று சேமிக்கப்பட்டால் தமிழகம் நீர் பகுதி மாநிலமாக உயர்ந்து நாடெங்கும் செழிப்பை உறுதிபடுத்தும் அல்லவா?

அன்று ஜெயலலிதா உருவாக்கிய மழைநீர் சேமிப்பு, தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் – இதற்கு முதற்புள்ளியை வைத்து பல கோடி லட்சம் முதலீடு செய்ய வேண்டிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினால் வரும் கால வரலாறு நீர் சேமிப்பிற்கு உவமையாய் ஸ்டாலின் பெயரை அல்லவா சுட்டிக் காட்டி பாராட்டும்.

அது சரி, இப்படி பல கோடி லட்சம் முதலீட்டில் திட்டம் என்றால் மத்திய அரசு ஒப்புதல் தருமா? நிதி ஒதுக்குமா?

நாடே அடுத்த 10 ஆண்டுகளில் இப்படிப்பட்ட புதிய கனவுத் திட்டங்களால் தான் வளர்ந்த பொருளாதாரமாக உயர முடியும், ஆகவே இப்படிப்பட்ட ஓர் திட்டத்தை குறைந்த அளவு கடற்கரையை ஒட்டியுள்ள ஏதேனும் ஒரு சிறு பகுதியில் பரீட்சார்த்தமாய் துவங்கியட யோசிக்க வேண்டும்.

அதனால் பெறப்படும் மழை நீர், குடிநீராகவும் அன்றாட உபயோக நீராகவும் இருக்கும் என்பதால் அதை அடுத்த 10 ஆண்டுகளில் பயன்பாட்டினால் மகிழும் பல குடும்பங்கள் புன் சிரிப்பை காணுவோம்.

அதுமட்டுமா? ஒரு சிறு குடியிருப்பு பகுதியில் எப்படிப்பட்ட சுனாமி மழை, அவர்களின் முகத்தில் பொழிவின் பின்விளைவும் பெரிய சேதமாக இருக்காது, அங்கு பலர் வந்து குடியிருக்கக் காத்திருப்பார்கள்.

மாற்றம் தான் நிரந்தரம் என்பதை உணர்ந்த அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவராக உயர்ந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின், இப்படி ஓர் முற்போக்கான சிந்தனையை பற்றி நிபுணர்களுடனும், தொழில்நுட்ப அறிஞர்களுடனும் ஆலோசிக்க வேண்டிய காலம் வந்து விட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *