சிறுகதை

“மாய மழை”- ராஜா செல்லமுத்து

அதுவரை வெயிலைப் போர்த்தியிருந்த வெட்ட வெளியைக் கருமேகங்கள் மறைத்துத் தூறல் தோரணங்களைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது வானம்.

அலுவலகத்திற்கு தயாராகி வெளியே வந்தான் நிலாநேசன். இரவெல்லாம் காெட்டித் தீர்த்த கனமழையில் வீதி எங்கும் தண்ணீர் நிரம்பியிருந்தது.போதாக்குறைக்கு இப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது.

அலுவலகத்திற்குப் போவது உசிதமல்ல. எங்கு பார்த்தாலும் மழை. இந்த மழையில் நாம் சென்றால் நிச்சயம் நனைந்து விடுவோம் .அதுவும் சென்னை மழை விவகாரமானது . தண்ணீர் தேங்குவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை . பெய்த மழை அப்படியே தேங்கி நிற்கும். மொத்த சென்னையும் மெரினாவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலாநேசன் அலுவலகத்துக்கு கிளம்பிய அதே நேரத்தில் அப்படியே வீட்டிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

சில நாட்களாக ஒரு கவிதை தேவதை அவனைக் கைபிடித்திருந்தாள். அந்த தேவதைத் தென்றல் அவனுக்குள் ஒரு சுகந்தத்தையே ஏற்படுத்தியிருந்தாள்.

ஒரு கோட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தவனின் கூட்டுக்குள் அந்தக் கவிதைக்குயில் கூடுகட்டி அவனுக்குள் ஒரு புது உலகத்தை விரித்திருந்தாள்.

நேற்று வரை வாட்ஸ் அப்பில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த அவனது நேசம் இப்போது கரையைக் கடக்காமல் அவன் மனதிலேயே மையம் கொண்டிருந்தது .

வாட்ஸ் அப் முழுவதும் அந்த தேவதை கவிதை விதையைத் தூவி இருந்தாள். சந்தோச சாவியை அனுப்பியிருந்தாள். மகரந்தத்தை மனதுக்குள் விதைத்திருந்தாள். மகிழ்ச்சி மத்தாப்புகளைக் கொளுத்தி ஒரு தீபாவளியை உருவாக்கியிருந்தாள்.

செக்கு மாடாகச் சுற்றிக் கொண்டிருந்தவனின் மூளையில் அந்த தேவதை திசைகாட்டினாள். அதுவரை அவளுடன் பேசவில்லை என்றாலும் வாட்ஸ் அப்பில் அவள் அனுப்பிய வாசகங்களையே திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்தான்.

உங்களைப் பார்க்காமலே உங்களை நான் காதலிக்கிறேன் என்று எழுதியவனுக்கு we will soon meet (நாம் விரைவில் சந்திப்போம் ) என்று அவள் எழுதிய வார்த்தைகள் அவனுக்குள் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது.

நாம் பார்க்காமலே காதலிக்கிறோம் என்கிறோம்.

இவள் will soon meet என்கிறாள்.

இது என்ன விந்தை ? இந்த தேவதை எனக்காகத்தான் பிறந்தவளாக இருப்பாளாே? முன்பே சந்தித்திருந்தால் நான் முன்னோடியாக இருந்திருப்பேன். என் திசைகள் எல்லாம் வேறு திசையில் பயணப்பட்டிருக்கும். காலம் கடந்து வந்த அன்பு இது அதை வார்த்தைகளால் கலங்கடித்து விடக் கூடாது என்று கவனமாக இருந்தான். அன்பை அன்பு கொண்டு தான் வெல்ல வேண்டும். அச்சரம் பிசகாத வார்த்தைகளை தான் பேச வேண்டும். வார்த்தைகளை வகிடெடுத்துத் தான் அனுப்ப வேண்டும் என்று அறிவுக்கும் உணர்ச்சிக்கும் ஒரு போராட்டமே அவனுக்குள் நடந்து கொண்டிருந்தது.

தேவதையுடன் பேசுவது தவறு என்று அறிவு சொன்னது. பேசாமல் இருந்தால் அந்த தேவதையை நாம் இழந்து விடுமோ? என்று உணர்ச்சி சொன்னது. இப்படி அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையே அவன் போராடிக் கொண்டிருக்கையில் அந்த தேவதை அவனை பேச வேண்டும் என்று சொல்லியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது? என்ன பேசுவது? எதைப் பேசுவது? என்று தெரியாமல் கலங்கி இருந்தான்.

சிறிது காலம் தான் அந்தச் சிறகுப் பறவை நம் இதயத்தில் அமர்ந்திருக்கிறது. ஒவ்வாத வார்த்தைகளைச் சொல்லி தேவதையை முகம் சுழிக்க வைத்து விடுவோமோ? என்ற மௌனம் அவனுக்குள் குடி கொண்டது. நேற்றே பேசியிருக்க வேண்டும் சூழல் சரியில்லாததால், அதை ஒத்தி வைத்திருந்தாேம். இன்று பேசலாம் என்று அந்த தேவதை சொன்னபோது, அவனுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்ததாக உணர்ந்தான்.

இருந்தாலும் எப்படி பேசுவது? எதை பேசுவது? நம் பள்ளித் தோழியோ, கல்லூரித் தோழியோ இல்லை. நம் அருகில் கூட அவள் இல்லையே ?அவளின் முகம் கூட இன்னும் நான் பார்க்கவில்லை. குரல் கூட கேட்கவில்லை. அதற்குள் காதலா? தவறு என்று அறிவு எச்சரித்தது. அவள் எப்படி இருந்தால் என்ன? இதயத்தை நிறைத்தவளை விட்டு விடக்கூடாது என்று உணர்ச்சி சொன்னது .இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட அவஸ்தையில் அவன் இருந்தபோதுதான் அன்று மழை வெளுத்து வாங்கிக் காெண்டிருந்தது.

அன்று நிலாநேசன் அலுவலகத்திற்குச் செல்ல தாமதமானது.

சரி,அந்த தேவதையுடன் இன்று பேசி விடுவது நல்லது என்று முடிவு செய்தான்.

கைகள் நடுங்க, இதயம் சமநிலையை விட்டுத் துடிக்க, இமைகள் படபடவென்று அடிக்க, கால்கள் தரையில் இருந்தாலும் நடுங்கிக் கொண்டிருக்கும் விரல்களைத் தரையில் அழுந்த பதித்துக் கொண்டு அந்த தேவதையின் எண்ணுக்கு போன் செய்தான் .

அவள் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. யப்பா….போன் பாேகல… அந்தச் சின்ன இடைவெளியில் அவனுள் மௌனம் .என்ன செய்யலாம்? என்று அடுத்த நாமே போன் செய்யலாமா ? என்று அவன் நினைப்பதற்குள், அந்த தேவதையே நிலா நேசனுக்கு போன் செய்திருந்தாள்.

ஐயோ எதிர் திசையில் அலைவரிசையில் அந்தத் திருமகள் வருகிறாளே? என்ன பேசுவது ? தொலைபேசியில் அந்த தேவதை பேசுகிறாளே? உள்ளுக்குள் உற்சாக பூக்கள் பூத்துக் குலுங்கின நிலா நேசனுக்கு .

நடுங்கிய கைகளோடு போனை எடுத்து

ஹலோ என்றான்.

அழுத்தம் திருத்தமாக ஹலோ நான்…… பேசுறேன் என்றாள்

டோன்ட் ஹெசிடேட் . டோன்ட் ஃபியர் ‘ .ஆர் யூ ஓ கே.? எதா இருந்தாலும் மனசுல வச்சிக்கக் கூடாது .மனசு விட்டு பேசுனா எல்லாம் கரஞ்சு போயிரும். என்கூட நீங்க பேசுங்க என்று அந்த தேவதை படபடவென்று பேசினாள்.

வெளியே விடாத மழை. இப்போது அவனுக்குள்ளும் மழை பெய்து கொண்டிருந்தது.

வாழ்க்கைங்கிறது ரொம்ப சுலபமானது. வானவெளி மாதிரி நம்ம மனச வச்சுக்கணும். பூமி மாதிரி எண்ணங்களை விரிக்கணும். உங்களுக்கு என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ? அதை என்கிட்ட சொல்லுங்க. ஐ கேன் ரெக்டிபை யுவர் ஃபியர் என்று படபடவெனச் சிறகடித்துப் பேசினாள் அந்த தேவதை.

அவளின் வார்த்தைகள் எதிர் திசையில் இருந்த நிலா நேசனுக்குள் ஒரு உற்சாக ஊற்றையே நிரப்பியிருந்தது.

இதுவரை அவளைப் பார்த்ததில்லை. இதுவரை அவளுடன் பேசியதில்லை. ஆனால் அப்படி ஒரு ஆனந்த அவஸ்தையை அவனுக்குள் விதைக்கிறாளே? யார் இவள் ? தமிழ் வழி நமக்குக் கிடைத்த தவமா? முகம் தெரியாமலே குரல் கேட்டு ஒருத்தியை நேசிக்கும் நம் இதயத்திற்கு என்ன சொல்வது?

அவள் நூறு வார்த்தை பேசினால் நிலா நேசன் ஒரு வார்த்தை தான் பேசினான். அவள் பேசிய வார்த்தைகளுக்குள் ஆன்மீகமும் எதார்த்த வாழ்க்கையும் பின்னிப் பிணைந்து கிடந்தன .

எது சொன்னாலும் ஆச்சரியப்படவோ? உற்சாகமடையவோ? துள்ளிக் குதிக்கவோ இல்லை ? எதார்த்தத்தின் பிடியில் அப்படியே இருந்தாள்

நிலா நேசன் தான் வெளியில் மழை பெய்தாலும் வீட்டுக்குள் நனைந்து கொண்டிருந்தான்.

அந்த மழை மட்டும் பெய்யாமல் இருந்திருந்தால் அவன் அலுவலகத்திற்கு சென்றிருப்பான்.அவளுடன் பேசுவது தள்ளிப் போயிருக்கும்.

அந்த மழை தான் நிலாநேசனை அந்த தேவதைக்குள் திணித்திருந்தது. ….. பேசினாள்….. அந்தத் தேவதை, அவள் பேசியதெல்லாம் அவனுக்கு தேசியகீதமாகத் தெரிந்தது.

இதுவரை யாருடனும் அவன் அவ்வளவு பேசியதில்லை.அவ்வளவு பேசினான். மழைத்துளிகளின் எண்ணிக்கையை எப்படி எண்ண முடியாதோ அப்படி அவனுக்குள் ஒரு ஆனந்தச் சாரல்.

இதுவரை அந்த தேவதையை அவன் சந்தித்ததில்லை.அவள் எழுதிய வாசகங்களை வாசித்த போது வசமிழந்தான். பேசிய போது அவனையே இழந்தான். பார்க்கும்போது என்னாகும்? என்பது கவிதைக்கு மட்டும்தான் தெரியும்.

நிலாநேசனும் அந்த தேவதையும் பேசி முடித்த போது, மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அலுவலகத்திற்கு புறப்பட்டான்.

இப்பாேது நிலா நேசனுக்குள் அடைமழை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *