செய்திகள்

பதிவு தபால் சேவை தொடங்கி இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவு

டெல்லி, நவ. 01–

இந்திய அஞ்சல் சேவையில் நம்பிக்கைக்குரிய சேவையாக விளங்கும் பதிவு அஞ்சல் சேவை தொடங்கி, இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

அஞ்சல் துறை தபால், மணி ஆர்டர், பார்சல் மற்றும் சேமிப்பு மற்றும் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தி சேவை மூடு விழா கண்டது. தபால் சேவையில் மிக முக்கியமாக கருதப்படுவது பதிவு அஞ்சல் சேவையாகும் .இந்திய அஞ்சல் துறையில் பதிவுத் தபால் முறை கடந்த 1849 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதிதான் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் லண்டனிலும் பதிவுத் தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சாதாரண தபால்கள் பெரும்பாலும் அதிகளவில் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில், முக்கிய ஆவணங்களை அனுப்பி வைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்தது. இந்த நிலையில், அதைக் கருத்தில் கொண்டுதான் பதிவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.

நம்பிக்கைக்குரிய சேவை

பாதுகாப்பு, உத்தரவாதம், பதிவுச் சான்று ஆகிய கூடுதல் வசதி கொண்டவையாக இருக்கும் பதிவு அஞ்சல்களை, கண்காணிக்கும் வசதியும், சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே அதைப் பெறும் வசதியும் இருப்பதால் இன்றும் நம்பிக்கைக்குரிய சேவையாக பதிவு அஞ்சல் சேவை திகழுகிறது.

நீதிமன்ற ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் போன்றவை தற்போது பதிவுத் தபால் முறையில் அனுப்பப்படுகின்றன. முன்பு பதிவுத் தபால் முறையில் எண்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பார் கோடு வசதிகளுடனும் இணையத்தின் வாயிலாக டிராக்கிங் செய்யும் வசதியும் செய்யப்பட்டு, டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *