செய்திகள்

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல்; கைகலப்பு

இணையத்தில் வைரலாகும் காட்சிகள்

மலே, ஜன. 29–

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும், எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, ஒருவரைக்கொருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

மாலத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகமது முய்சு அதிபராக பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து நேற்று மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் நோக்கத்தில் இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்நாட்டின் அதிபர் முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக 4 அமைச்சர்களை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டு, வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியது. இதனால், ஆளும் கட்சி எம்.பி.களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதல் காட்சிகள்

தொடர்ந்து மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்.டி.பி) எம்.பி இசா மற்றும் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி அப்துல்லா ஷஹீம், அப்துல் ஹக்கீம் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நான்கு எம்.பி.க்கள் சேர்ந்து, ஒரு எம்.பி.யின் காலை பிடித்து கொண்டு சண்டையிட்டு கொள்கின்றனர்.

மோதலை தடுக்க வந்தவர்களையும் அவர்கள் தாக்குவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும், மற்றொரு வீடியோவில், சபாநாயகர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று மைக்குகளை பிடுங்கி ஏறிந்திருக்கின்றனர். மேலும், இரண்டு பேர் சபாநாயகர் பக்கத்தில் நின்று விளையாட்டு பொருளை கையில் எடுத்து ஊதுகின்றனர். அந்த சத்தம் தாங்க முடியாமல் சபாநாயகரும் காதை மூடும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. மாலத்தீவு நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் அடித்துக் கொண்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *