செய்திகள்

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல : ஸ்டாலின் பேச்சு

சென்னை, அக்.22-–

கோவிலையும், பக்தியையும் பாரதீய ஜனதா தனது அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டமும், சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நேற்று சென்னை செனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–-

பாசிசவாதிகள் ஒருபக்கம். இவர்களுடைய பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அடிமை அண்ணா தி.மு.க. மறுபக்கம். கொள்கை என்றால், ‘‘கிலோ என்ன விலை?’’ என்று கேட்கும் கொள்கையற்ற கூட்டம் தான் அண்ணா தி.மு.க.

இனிமேலும், பா.ஜ.க.வுடன் இருந்தால் தமிழ்நாட்டு மக்களால் மொத்தமாகப் புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்து, ‘‘உள்ளே வெளியே’’ ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வும் அண்ணா பெயரில் கட்சி நடத்தி அதை பா.ஜ.க.விடம் அடகு வைத்த அண்ணா தி.மு.க.வும் வேறு வேறு அல்ல. நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்தான் இருவரும்.

பா.ஜ.க. அடக்குமுறை

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அரசியல் எதிரிகள் மேல் மட்டுமல்ல, ஊடகவியலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடப் பற்றுமிக்கவர்கள் என்று எல்லோர் மீதும், அதிகார அத்துமீறல்கள், மிரட்டல்கள், அடக்குமுறை ஏவல்கள் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ‘சோஷியல் வைரசை’தான் நாம் துணிவோடு எதிர்த்து நிற்கிறோம். மிசா, தடா, பொடா எல்லாம் பார்த்தாயிற்று. மிரட்டல், உருட்டல் இதெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது என்பதால்தான், பொய் மூட்டைகளையும், அவதூறுகளையும் கட்டவிழ்க்கிறார்கள். ஹிட்லருக்காவது ஒரே ஒரு கோயபல்ஸ்தான் இருந்தார். ஆனால், கோயபல்ஸ் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் எவ்வாறு இருக்குமோ அப்படித்தான் அந்தக் கூட்டம் இருக்கிறது.

பொய் சொல்ல

கூச்சம் இல்லை

போகிறபோக்கில் யார் மீது வேண்டுமானாலும் அவதூறு பரப்பலாம். என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். எதற்கும் ஆதாரம் வேண்டாம். பொய் பேசுகிறோமே என்கிற கூச்சம் வேண்டாம். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ‘வாட்ஸ்-அப் யுனிவர்சிட்டி’தான்.

அதில் என்ன வதந்திகளை வேண்டுமானாலும் பரப்பலாம். அதை நம்புவதற்கு ஆட்டுமந்தைக் கூட்டம் தயாராக இருக்கிறதென அடித்து விடுகிறார்கள். ‘தம்’ பிடித்து அவர்கள் ஊதுகிற பொய் பலூனை, உண்மை என்கிற ஊசியை வைத்து எளிதாக நாம் உடைத்து விடுகிறோமே என்ற எரிச்சல் அவர்களுக்கு. பொய்களுக்குப் பொய்கள் என்றைக்குமே பதிலாகாது.

போலியான பெருமைகள் நமக்கு தேவையில்லை. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும். நமது செய்திகள் உண்மையானவையாக இருக்க வேண்டுமே தவிர, பா.ஜ.க.வினரைப் போல போலியாக இருக்கக்கூடாது.

ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல…

அவர்களுக்கு இப்போது ஒரே வேலைதான். துர்கா ஸ்டாலின் எந்தக் கோவிலுக்கு போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ‘‘பாத்தீர்களா, கோவிலுக்குச் செல்கிறார்’’ எனப் பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோவிலுக்கும்தான் துர்கா செல்கிறார். அது அவரது விருப்பம். அதை நான் தடுக்கவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்துக்கு எதிரிகள் அல்ல.

கோவிலும், பக்தியும் அவரவர் உரிமை விருப்பம். ஏராளமான கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான். கருணாநிதியின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில். ‘‘கோவில் கூடாது என்றல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது’’

கோவிலையும், பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மிகத்தையும், அரசியலையும் மிகச்சரியாக பகுத்து பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள்.

‘‘இந்த கோவில இடிச்சிட்டாங்க, அந்தக் கோவில இடிச்சிட்டாங்க’’ என ‘வாட்ஸ்-அப்’பில் பூகம்பப் படங்களைப் போட்டு வதந்தி பரப்புகிறார்கள். ஆனால், உண்மை என்ன? ஆயிரம் கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் விழா நடத்திய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.

மதவெறியை தூண்டி

ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை மீட்ட ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. யார் யாரிடம் இருந்து, எங்கே எங்கே இருந்து இந்தச் சொத்தெல்லாம் மீட்கப்பட்டது என அறநிலையத்துறை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்வதெல்லாம்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

விளக்கு எரிந்தால் திருடனுக்குத்தான் பிடிக்காது. கோவிலை முறையாகப் பராமரித்தால் மதவெறியைத் தூண்டிக் குளிர்காய நினைக்கும் கும்பலுக்குப் பிடிக்காது. அதனால் உண்மைகளைத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். நம்முடைய கருத்துகளைத் தமிழைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள மற்ற மொழி பேசும் சகோதர, சகோதரிகளிடம் எடுத்துச் செல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தி.மு.க. மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்திய ‘நீட்’ தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *