செய்திகள்

சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழை

ஆவடியில் 19 செ.மீ.மழை: 8 விமானங்கள் ரத்து

சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்

சென்னை, நவ. 30–

சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலை, தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாக உள்ளது.

ஆங்காங்கே ஆட்டோ, ஸ்கூட்டர்கள் சிக்கி கொண்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது. சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் களப்பணிகளை பார்வையிட்டு மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை அகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதிகப்பட்சமாக ஆவடியில் 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

8 ஆண்டுகளுக்கு பின்

அதிக மழை

2015க்கு பிறகு சென்னையில் அதிக கனமழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம், தி.நகர் பகுதியில் இருவர் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

போக்குவரத்து

கடும்பாதிப்பு

ராயப்பேட்டை மெயின் ரோடு மற்றும் கீழ்கட்டளை ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்வதே சிரமமாக இருந்தது.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதில் மழைநீர் தேங்கியதால், நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

சாலைகளில் நீர் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டது. இரவோடு இரவு சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள்.

கனமழை தொடர்ந்து கொட்டி வந்த நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேற்கு மாம்பலம், தி. நகரில் பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சினையே மழை நீர் தேங்க காரணம் என்று கமிஷனர் தெரிவித்தார்.

வேளச்சேரி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் தரமணி பெருங்குடியில் இருந்து செல்வோர் பல கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.

சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.இதனால் நேற்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர். இதே போன்று தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

கடும்பாதிப்பு

ஆவடி மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அம்பத்தூர் ஆவின் பகுதியில் உள்ள பட்டரவாக்கம் காந்திநகர், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு மின் வாரிய காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வெள்ளம் போல தேங்கியது. இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.இதனால் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நீடிக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பு களை அதிகாரிகள் சரி செய்துதர வேண்டும் என்பதே அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வீடுகளுக்குள்

தண்ணீர்

கடும் மழை காரணமாக சாலை, தெருக்களில் எல்லாம் வெள்ளக் காடாக இருந்தது. தி.நகர் பஸ் நிலையத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர்தேங்கி இருந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

சாலைகளில் எங்கும் மழைநீர் தேங்கி இருந்ததால் வாகனங்கள் செல்லமுடியாமல் மெல்ல ஊர்ந்து சென்றன. பல இடங்களில் ஆட்டோக்கள், ஸ்கூட்டர் தண்ணீரில் நின்று விட்டதால் மிகவும் அவதிப்பட்டனர். பல்வேறு இடங்களில் வீடுகள், கடைகளுக்குள் எல்லாம் தண்ணீர் புகுந்து விட்டது.

மருத்துவமனைக்குள்

தண்ணீர்

கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று அண்ணாசாலை, ஜி.என்.செட்டி சாலை, உஸ்மான் சாலை என அனைத்து சாலைகளில் தேங்கி இருந்தது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

சென்னை பாரிமுனையில் இருந்து அசோக் நகருக்கு அரை மணி நேரத்தில் வழக்கம் போல வரமுடியும். ஆனால் நேற்று பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. எனவே பாரிமுனையில் இருந்து அசோக்நகர் வர 3 மணி நேரம் ஆனது.

நகரின் அனைத்து பகுதிகளில் இதே போன்ற நிலை இருந்தது.

நேற்றிரவு குறிப்பாகச் சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை பகுதிகளில் மழை அதிகமாக இருந்தது. குறிப்பாக மீனம்பாக்கத்தில் மழை அதிகமாகவே இருந்தது. கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

8 விமானங்கள் ரத்து

தொடர்ச்சியாகக் கனமழை பெய்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் இருந்து செல்லக்கூடிய அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 15 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

அதேபோல சென்னைக்கு வரவேண்டிய திருச்சி, மதுரை உள்பட 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்துள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகள், ஒருங்கிணைத்த கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மநகராட்சி மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டிருந்தால், 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் குழுவினர்

தொடர் கன மழையால் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்து தலா 25 பேரைக் கொண்ட 5 தேசிய பேரிடர் குழுவினர் இன்று காலை சென்னை வந்தனர். இதில் ஒரு குழுவினர் சென்னை அடையாறு, இந்திரா நகர் பகுதிக்கும்,2 குழுவினர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் 2 குழுவினர் விழுப்புரம் மாவட்டத்திற்கும் புறப்பட்டு சென்றனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 19 செ.மீ. மழையும், சென்னை கொளத்தூர், திரு.வி.க நகர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தலா 15 செ.மீ. மழையும், சென்னை, அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது

இந்த நிலையில் சென்னை யானைக்கவுனி பகுதிகளில் மழை பாதிப்புகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:–

“தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. முதலமைச்சரின் உத்தரவின்படி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் செயலாற்றி வருகின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *