செய்திகள்

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

கொழும்பு, மார்ச் 10–

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 22 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *