செய்திகள்

அட்சய திருதியை: தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு

நகைக்கடைகளில் குவிந்த மக்கள்

சென்னை, மே 10–

அட்சய திருதியை தினமான இன்று சென்னையில் தங்கம் விலை ஒரேநாளில் 2 முறை உயர்ந்துள்ளது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

இன்று அதிக தான தர்மங்கள் செய்யவும், வீட்டுக்கு அவசியமான அரிசி, உப்பு மற்றும் மங்களகரமான பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதும் நமது முன்னோர்களின் வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் சமீப காலமாக நகைக்கடைகளின் விளம்பரத்தினால், அட்சய திருதியை என்றாலே நகைக் கடைகளில் நகை வாங்குவது மட்டுமே நோக்கமாக மாற்றப்பட்டு அதன் அடிப்படை வழக்கமே மாறிப்போயிருக்கிறது.

இந்த ஆண்டு அட்சய திருதியை திதி இன்று காலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரங்களில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர். நகைக்கடைகளில்

குவிந்த மக்கள்

தங்கத்தின் விலை என்னதான் விண்ணை தொடும் அளவில் இருந்தாலும், அட்சய திருதியையான இன்று நகைக்கடைகளில் கூட்டம் அதிக அளவில் இருந்தன. பெண்கள் பலரும் காலையில் நகைக்கடை திறந்ததுமே சென்று நகைகளை வாங்கி சென்றனர்.

மக்களை கவரும் வகையில் நகைக்கடைகளில் சலுகைகள் அறிவித்திருந்தன. செய்கூலி, சேதாரம் இல்லை, கற்களுக்கு விலை இல்லை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நகைக்கடைகள் அறிவித்திருந்தன. அதுமட்டுமின்றி நகை வாங்க முன்பதிவு செய்யும் வசதியையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இன்று நகை கடைகயில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே நகையை முன்பதிவு செய்து கொண்டு இன்று நகைகளை வாங்கி சென்றனர்.

சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் இன்று காலை முதலே நகை வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பெரிய நகைக்கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி நகைகளை வாங்கிச் செல்ல வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தங்க நாணயம் மட்டும் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி கவுண்டர் அமைக்கப்பட்டிருந்தது. புதிய டிசைன்களில் எடை குறைவான தங்க சங்கிலி, பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

2 முறை உயர்ந்த தங்கம் விலை

இந்த நிலையில் அட்சய திருதியை தினமான இன்று சென்னையில் தங்கம் விலை ஒரேநாளில் இரண்டு முறையாக உயர்ந்துள்ளது.

இன்று காலையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 அதிகரித்த நிலையில், 2 மணி நேரத்தில் சவரனுக்கு மீண்டும் ரூ.360 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு இருமுறை தலா ரூ.360 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு இருமுறை தலா ரூ.45 உயர்ந்து ரூ.6,705-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *