செய்திகள்

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி: 95 பதக்கத்துடன் 2 வது இடத்தில் தமிழ்நாடு

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி: 95 பதக்கத்துடன் 2 வது இடத்தில் தமிழ்நாடு

சென்னை, ஜன. 31–

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளின் 12 வது நாளில் தமிழ்நாடு 37 தங்கப்பதக்கங்களை பெற்று புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்திய ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றோடு நிறைவு பெற உள்ளது.

முதல் 10 இடங்கள் பெற்ற மாநிலம்

‘விளையாடு இந்தியா’ என்ற பெயரிலான இந்த போட்டிகள் தொடங்கிய 12 வது நாளில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 37 தங்கப் பதக்கம், 20 வெள்ளிப் பதக்கம், 38 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்று புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 53 தங்கம், 47 வெள்ளி, 52 வெண்கலம் என மொத்தம் 152 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. அரியானா மாநிலம் 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதங்கங்களுடன் 3 வது இடத்தை பிடித்துள்ளது. 4 வது இடத்தில் உள்ள டெல்லி, 13 தங்கம், 18 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை வென்றுள்ளது. 5 வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் 13 தங்கம், 16 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களை வென்றுள்ளது.

6 வது இடத்தில் உள்ள பஞ்சாப் 11 தங்கம், 12 வெள்ளி, 15 வெண்கலத்துடன் மொத்தம் 38 பதங்கங்களையும், கேரளா 11 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலத்துடன் மொத்தம் 34 பதக்கங்கள் பெற்று 7 வது இடத்தையும், தெலங்கானா 11 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களுடன் 8 வது இடத்தையும், உத்தரபிரதேசம் 10 தங்கம், 13 வெள்ளி, 18 வெண்கலத்துடன் மொத்தம் 41 பதங்கங்கள் பெற்று 9 வது இடத்தையும் மணிப்பூர் 10 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலத்துடன் மொத்தம் 31 பதக்கம் பெற்று 10 வது இடத்தையும் பிடித்துள்ளது.

11 முதல் 30 வரையான இடங்கள்

மேற்குவங்கம் 8 தங்கத்துடன் மொத்தம் 25 பதக்கம் வென்று 11 வது இடமும், கர்நாடகா 7 தங்கத்துடன் மொத்தம் 40 பதக்கத்துடன் 12 வது இடமும், ஆந்திரா 7 தங்கத்துடன் மொத்தம் 26 பதக்கம் பெற்று 13 வது இடமும், மத்திய பிரதேசம் 6 தங்கத்துடன் 29 பதக்கம் பெற்று 14 வது இடமும், ஒடிசா 6 தங்கத்துடன் மொத்தம் 20 பதக்கம் வென்று 15 வது இடமும், குஜராத் 6 தங்கத்துடன் மொத்தம் 24 பதக்கம் வென்று 16 வது இடமும், அசாம் 5 தங்கத்துடன் மொத்தம் 22 பதக்கம் வென்று 17 வது இடமும், சண்டிகர் 5 தங்கத்துடன் மொத்தம் 17 பதக்கங்கள் வென்று 18 வது இடமும், உத்தரகாண்ட் 5 தங்கத்துடன் மொத்தம் 16 பதங்கங்கள் வென்று 19 வது இடமும், ஜார்கண்ட் 3 தங்கத்துடன் மொத்தம் 9 பதக்கங்கள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 20 வது இடத்தையும் பிடித்துள்ளது.

பீகார் 2 தங்கத்துடன் மொத்தம் 5 பதக்கங்களும், இமாச்சல் பிரதேசம் ஒரு தங்கத்துடன் மொத்தம் 14 பதக்கங்களும் ஜம்மு காஷ்மீர் ஒரு தங்கத்துடன் மொத்தம் 7 பதக்கங்களும், சத்தீஸ்கர் மொத்தம் 8 பதக்கங்களும், திரிபுரா மொத்தம் 3 பதக்கங்களும், மிசோரம், நாகலாந்து, புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் தலா 2 பதக்கங்களும், டாமன் டயூ ஒரு பதக்கத்தை வென்று புள்ளிப்பட்டியலில் 21 முதல் 30 வரையான கடைசி 10 இடங்களை பிடித்துள்ளது.

இந்த கேலோ இந்தியா போட்டிகளில் 26 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது. 26 போட்டிகளில் மொத்தம் 933 பதக்கங்கள் இடம் பெற்றுள்ளது. அதில் 278 தங்கம், 278 வெள்ளி, 377 வெண்கலப் பதக்கங்களை பெற, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6000 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *