செய்திகள்

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஐதராபாத்,நவ. 30–

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானா மாநிலத்தின் 3-வது சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக 119 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது.

இதில் இதுவரை 2 முறை முதல்வராக பதவி வகித்துள்ள சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.), பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.

இதில், நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் வாக்கு பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி உள்பட மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 221 பேர் பெண்கள். திருநங்கை ஒருவரும் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 35,655 வாக்கு மையங்களில், 3.17 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கின. அதற்கு முன்னதாக அனைத்து வாக்கு சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் நிஜாமாபாத், நாகார்ஜுன சாகர், கம்மம் உட்பட சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவும் இந்த இடங்களில் தாமதமாக தொடங்கியது.

ஆனால், வாக்கு எண்ணிக்கை நடைபெற தொடங்கிய காலை 7 மணிக்கு முன்னரே பலர் நீண்ட வரிசைகளில் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காத்திருந்தனர். இதனால் இம்முறை வாக்கு சதவீதம் உயரும் என எண்ணப்படுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 8.52 % வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 20.64% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

4 ஆயிரம் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு கூடுதல் ராணுவப்படை மற்றும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 75 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் நடிகர் நாக சைதன்யா தனது வாக்கினை செலுத்தினார்.இதேபோன்று ஜூனியர் என்.டி.ஆர், வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, அகில இந்திய மஸ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அவரது சகோதரி எம்.எல்.சி கவிதா, உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

வாக்களித்த பின் கவிதா நிருபர்களிடம் கூறுகையில், ஆண்கள், பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர் அனைவரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இது விடுமுறை அல்ல. ஓட்டுப் பதிவில் கலந்து கொண்டு ஜனநாயகம் வலுப்பெற செய்வதற்கான நாள்.

2018ம் ஆண்டு மக்கள் எப்படி பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு ஆதரவளித்தனரோ, அதே நிலைமையே இந்த முறையும் காணப்படுகிறது. மக்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன். எங்கள் டிஎன்ஏ எங்கள் மக்களுடன் பொருந்துகிறது. நாங்கள் மாநிலத்திற்காக போராடினோம். நாங்கள் மாநிலத்திற்காக உழைத்தோம். நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாங்கள் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று செஞ்சுரி அடிக்கப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:–

தெலுங்கானாவில் உள்ள சகோதர சகோதரிகள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் திரண்டு வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வயதினர் தங்கள் வாக்கினை தவறாது செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிரபுக்களை மக்கள் வெல்லப்போகிறார்கள். என் தெலுங்கானா சகோதர சகோதரிகளே! திரளாக வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள். தங்கத்தினாலான தெலுங்கானா கட்டமைப்புக்கு வாக்களியுங்கள்! காங்கிரஸை வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

நடந்த முடிந்த மிசோரம், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து தெலுங்கானா மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *