செய்திகள்

10ம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி

* அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சியுடன் முதலிடம்

* தமிழில் 8 பேரும், கணிதத்தில் 20,691 பேரும் சதம்

1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி

சென்னை, மே 10–

10–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26–ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 8–ந்தேதி வரை நடத்தப்பட்டது.

மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 88 முகாம்களில் ஏப்ரல் 12ல் தொடங்கி 22ம் தேதி வரை நடந்தது. பின்னர் இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ இணையதள முகவரிகள் மூலம் தங்களது தேர்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

மேலும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு, அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் எந்தவித கட்டணமுமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

தேர்வை 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினார்கள்.

1,364 அரசு பள்ளிகள்

100% தேர்ச்சி

இதில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 (94.53%), மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 (88.58%) ஆகும். மாணவர்களை விட மாணவியர்கள் 5.95 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.39% ஆக இருந்தது.

தேர்வெழுதிய பள்ளிகளின் எண்ணிக்கை 12,625 ஆகும். இதில் 4 ஆயிரத்து 105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 1,364 அரசு பள்ளிகள் ஆகும்.

தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளிகள் 87.90%ம், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 91.77%ம், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43%ம் பெற்றுள்ளன.

பொதுத் தேர்வை 13 ஆயிரத்து 510 மாற்றுத் திறனாளி மாணவர்கள் எழுதினர். இதில் 12,491 பேர் (92.45%) தேர்ச்சி பெற்றனர். சிறைக் கைதிகளில் தேர்வு எழுதிய 260 பேரில், 228 பேர் (87.69%) தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு சிறைக் கைதிகள் 42 சதவீத பேர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

கணிதத்தில்

20,691 பேர் சதம்

தமிழ்ப் பாடத்தில் கடந்த முறை யாரும் 100க்கு 100 மதிப்பெண் எடுக்காத நிலையில், இந்த ஆண்டு 8 பேர் 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதப் பாடத்தில் 20,691 (கடந்த முறை 3,649) பேரும், அறிவியல் பாடத்தில் 5,104 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4,428 (கடந்த முறை 320) பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பாடம் வாரியாக பார்த்தால் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடத்தில் 96.85 சதவீதம், ஆங்கிலத்தில் 99.15 சதவீதம், கணிதத்தில் 96.78 சதவீதம், அறிவியலில் 96.72 சதவீதம், சமூக அறிவியலில் 95.74 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வில் 75,521 மாணவ–மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் (97.31%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கை மாவட்டமும்–97.02% (கடந்த முறையும் 2வது இடம்) , 3வது இடத்தை ராமநாதபுரம் மாவட்டமும் (96.36%) பிடித்துள்ளது. கன்னியாகுமரி (96.24%) 4வது இடமும், திருச்சி (95.23%) 5வது இடமும் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் (82.07% ) கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறை போல இந்த முறையும் சென்னை மாவட்டம் (88.21%) 30வது இடத்தில் உள்ளது.

துணைத்தேர்வுக்கு

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு ஜூலை 2–ந்தேதி துணைத் தேர்வு நடத்தப்படும். இதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இம்மாதம் 15–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தங்களது வெற்றியை குடும்பத்தினருடனும், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *