செய்திகள் நாடும் நடப்பும்

50 வது சதம் : வரலாறு படைத்த கோலியை கிரிக்கெட் உலகம் பாராட்டுகிறது


நாடும் நடப்பும்


நடந்து கொண்டிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியின் இறுதி கட்டத்தை நெருங்கும் தருவாயில் இத்தொடரில் அரை இறுதிப் போட்டி வரை இருந்த 10 போட்டிகளையும் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்து விட்டது இந்தியா!

இது மிகப்பெரிய சாதனை. காரணம் இந்தியாவின் பல்வேறு ஸ்டேடியங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் எந்த சிக்கலுமின்றி எல்லா மேட்ச்களையும் வென்றிருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

1983ல் முதல் முறையாக கபில்தேவ் தலைமையில் இதே கோப்பையை வென்று மேற்கு இந்திய அணியின் கனவுகளை சிதைத்தோம்!

பிறகு 2011ல் தோனி தலைமையிலான அணி அதே சாதனையை செய்து இதே உலக கோப்பையை வென்றது.

அந்த அணியில் இருந்த இளம் வீரர்கள் கோலி, அஸ்வின் அணியில் இருந்தனர். அஸ்வின் அந்தப் போட்டியில் இறுதிப் போட்டியில் விளையாடிய அணியில் பங்கேற்க தேர்வு செய்யப்படவில்லை.

அந்த போட்டியின் வெற்றிக்கு அதிமுக்கிய காரணங்களில் வீராட் கோலியின் அட்டகாசமான ஆட்டமும் ஒரு காரணமாகும்.

நட்சத்திர நாயகர்கள் சச்சின், சேவாக் போன்ற பிரபலங்கள் சொர்ப்ப ரன்களில் இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் மலிங்காவிடம் பலியாகி விட்ட நிலையில் விளையாட வந்த கோலி 35 ரன்கள் எடுத்த பாங்கு அவரது அபார ஆட்டத்திறனை உலகம் பார்த்து பாராட்டியது.

ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் 49 சதங்களை விளாசிய ஒரே ஒரு பேட்ஸ்மேன் சச்சின் ஆவார். அவர் முன்னிலையில் அரை இறுதி சுற்றில் கோலி 50வது ஒரு நாள் சதத்தை அடித்து உலகப் பட்டியலில் முன்னிலையில் இருப்பது பாராட்டுக்குரியது.

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்திருப்பது எனக்கும் மகிழ்ச்சியை தருகிறது என்று அரங்கில் தோன்றி பாராட்டினார் சச்சின் டெண்டுல்கர்!

இப்படி இரு ஜாம்பவான்களின் சாதனைகளை காணும் அதிர்ஷ்டத்தை இன்றுள்ள ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்திருப்பதும் ஆச்சரியமான நிகழ்வு!

இம்முறை வீராட்டின் சதம் மிக பொறுப்புடன் விளையாடி அதை அணியின் பலமாக மாற்றினார். இவரது சதத்தில் 8 பவுண்ட்ரிகள் மற்றும் ஒரு சிக்சரும் மட்டுமே இருந்தது. மற்றவை எல்லாம் ஓடி எடுத்தே சதத்தை அடித்துள்ளார்.

சதத்தை தாண்டிய பிறகு மும்பையின் கடுமையான வெப்ப நிலையால் உடல் அசதியால் தசைகள் இறுகிக் கொண்ட நிலையில் தொடர்ந்து ஆட முடியுமா? என்ற கேள்விகளுக்கு இடையே கோலி திறம்பட ஆடி தனது ஒப்பில்லா சாதனையை செய்து கிரிக்கெட் உலகில் தனது சாதனை முத்திரையை பதித்துள்ளார்.

2009 ல் இலங்கை அணிக்கு எதிராக முதல் சதத்தை அடித்த அவர் பிறகு 2011 நான்கு சதனங்களும் 2012ல் ஐந்து சதங்களும் 2013ல் நான்கு சதங்களும் என சாதனைகளை தொடர்ந்த அவர் 2018ல் ஆறு சதங்களை அடித்து கிரிக்கெட் உலகின் புதிய அரசராக முடிசூட்டிக் கொண்டு தனது சாதனைகளை தொடர்ந்தார்.

இந்த ஆண்டு 2023ல் இதுவரை ஆறு சதங்களை அடித்து யாரும் எட்டாத 50 வது சதத்தை அடித்துள்ளார்.

தனது உடற்பயிற்சியை ரசிகர்கள் புரிந்து கொள்ள பலமுறை வீடியோ பதிவுகளை வெளியிட்ட அவரது எண்ணம் விளையாட திறமை மட்டும் போதாது, நல்ல உடல் ஆரோக்கியமும் அவசியம் என்பதை ரசிகர்களுக்கும் சக விளையாட்டு வீரர்களுக்கும் புரிய வைத்தவர் ஆவார்.

சச்சின் 49 வது போட்டியில் தான் அடித்துள்ளார். ஆனால் வீராட் கோலியோ 291 வது ஆட்டத்தில் புதுச்சாதனையை செய்துள்ளார்.

35 வது வயதில் சச்சினைப் போல் ஆட 2009 ல் கிரிக்கெட் அரங்கில் நுழைந்த அவர் இளம் வீரராக 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பிடித்ததுடன் கேப்டனாக விளையாடி தனது அதிரடி விளையாட்டால் அடுத்த தலைமுறை ஆட்ட நாயகனாக வருவார் என ரசிகர்களை எண்ண வைத்தார்.

இன்று தனது 35 வது வயதில் புதிய உலக சாதனையை படைத்து தன் திறமைக்கு மேலும் பல புது சவால்களை சந்திக்க தயராகியுள்ளார்.

கவாஸ்கர், சச்சின், சேவாக் போன்ற உச்சத்தை தொட்ட பேட்ஸ்மேன்களின் முன்னிலையில் மும்பையில் இந்த சாதனையை செய்துள்ள வீராட் மேலும் மேலும் சாதிக்க அவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். நாடே அவரது சாதனையை பாராட்டி, அவரது விடாமுயற்சியையும் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த சிக்கலுமின்றி குடும்பபாங்காய் வாழ்வதும் தொடர வாழ்த்துகிறது.

உலக கோப்பையை இறுதி போட்டியில் இந்திய அணி வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கப் போகிறோம். ஆனால் காலத்தை வென்று தலைமுறைகளும் பாராட்டும் மிகப்பெரிய சாதனையை வீராட் கோலி செய்து தனது ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறார். அவரது சாதனைகள் தொடர மக்கள்குரல்–டிரினிட்டி மிரர் பாராட்டி வாழ்த்தி கைகுலுக்குகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *