செய்திகள்

கல்வெட்டியல், தொல்லியல் பட்டய வகுப்பு: டிசம்பர் 29–ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ.30–

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2024–ம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு–2024 ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழுநேரம்) நேரடியாக ஓராண்டுக் காலம் நிறுவனத்தில் நடைபெறும்.

இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் www.ulakaththamizh.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வகுப்புக்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்புத் தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- + சேர்க்கைக் கட்டணம் ரூ.3 ஆயிரம்- + அடையாள அட்டைக்கு ரூ.100, மொத்தம் ரூ.3200 – செலுத்த வேண்டும்.

கட்டணத்தை The DIRECTOR, International Institute of Tamil Studies எனும் பெயரில் வங்கி வரைவோலையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும் அல்லது நேரடியாக நிறுவன அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பம் செய்திடலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 29–ம் தேதி மாலை 5 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைதளத்தில் பின்னர் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு, வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *