செய்திகள்

நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.-வுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி திட்டவட்டம்

மதுரை, ஜன.8–-

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது. எனவே சிறுபான்மையினர் அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும் என மதுரையில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.

மதுரை வண்டியூர் சுற்றுச்சாலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெல்லட்டும் மதசார்பின்மை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

மாநாட்டு மேடைக்கு திறந்த வாகனத்தில் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–-

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும் போது அண்ணா தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது. தி.மு.க. கூட்டணி மதசார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த மேடைதான் மதசார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு எல்லா மதத்தலைவர்களும் இருக்கிறார்கள். நான் முதலமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை.

உழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு தெரியுமா?

என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது. நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் வந்தேன். ஆனால் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வாரிசு என்ற அடிப்படையில் முதலமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் வந்துள்ளார். அவர் நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

மதுரை ராசியான மண். தொட்டது துலங்கும். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாடும் வெற்றி பெறும். சிறுபான்மையினரை அண்ணா தி.மு.க. அரண் போல காத்து வருகிறது. கடந்த 30 ஆண்டு கால அண்ணா தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டன. அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சி பின்னுக்கு தள்ளப்படும்.

யார் அடிமை?

மத்தியில் காங்கிரஸ் அரசுடன் 12 ஆண்டுகள் கூட்டணி வைத்த தி.மு.க., மக்கள் பிரச்சினைகளை பற்றி அப்போது பேசியதா? அவர்கள் காங்கிரசுக்கு அடிமையாக இருந்தார்கள். ஆனால் தி.மு.க. எங்களைப் பார்த்து அடிமை என கூறுகிறது. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை.

மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டுமென இந்தியா என்ற பெயரில் தி.மு.க. ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி மக்களுக்காக அல்ல. தனது குடும்பத்தினருக்காக ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப்பட்டது, தொழில் முதலீட்டு மாநாடுகள் வாயிலாக எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் இனி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம். இதனை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவர் அண்ணா தி.மு.க.வையும், பாரதீய ஜனதாவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன். கட்சியை விட்டுச் சென்ற நபரை (ஓ.பன்னீர்செல்வம்) அண்ணா தி.மு.க.வில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

40 தொகுதியிலும் வெற்றி

வரும் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு, நிறைய கட்சிகள் வர உள்ளன. எனவே நாங்கள் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சிறுபான்மை மக்கள் அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இருளில் இருக்கும் மக்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர நாங்கள் பாடுபடுகிறோம். கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் சிந்தனை. தேர்தல் வந்துவிட்டால் கவர்ச்சி நாடகம் ஆடுவதுதான் தி.மு.க.வின் கொள்கை. அவர்களுக்கு தேவை அதிகாரம் மட்டும்தான். கடந்த 2½ ஆண்டுகளில் மக்கள் பணத்தை கொள்ளையடித்ததைத்தான் தி.மு.க.வின் சாதனையாக சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபிக், மாநில பொதுச் செயலர் நிஜாமுகைதீன், மாநிலச் செயலர் அபுபக்கர் சித்திக், துணைத் தலைவர் எஸ்.எம்.ரபிக், திருவடிக்குடில் அடிகளார், பேராயர் யுவான் அம்புரோஸ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநிலத் தலைவர் அப்துல் மஜீத், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தக்கலான் பாகவி முகமது பருக் ஆகியோர் பேசினர்.

அண்ணா திமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, விஜயபாஸ்கர், நிர்வாகிகள், திரளான எஸ்டிபிஐ கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *