செய்திகள்

தமிழகத்தை கண்டுகொள்ளாத பா.ஜ.க.வை மக்கள் நிராகரிக்க தயாராகிவிட்டார்கள்

வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கான இலச்சினையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, மார்ச் 15-–

தமிழ்நாட்டை கண்டுகொள்ளாத பாரதீய ஜனதாவை மக்கள் நிராகரிக்க தயாராகிவிட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,181 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதில், முதற்கட்டமாக 87 திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தங்கசாலையில் நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 87 திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன், வடசென்னை வளர்ச்சித்திட்டத்துக்கான இலச்சினையையும் வெளியிட்டார். முன்னதாக, வடசென்னை வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–-

‘‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’’ முடிவுறுகிறபோது, வடசென்னையின் வரலாற்றில், ஒரு புதிய சாகப்தத்தை தி.மு.க. எழுதியிருக்கும். கடந்த 10 ஆண்டு கால அண்ணா தி.மு.க. ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் மூழ்கியது? சென்னை மட்டுமா, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டு சென்றார்கள். அவர்களைப் போன்று தான் 10 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை.

ஆனால், நாளைக்கு (அதாவது இன்று) பிரதமர் மோடி, கன்னியாகுமரி வரப்போகிறார். எதற்காக வரப்போகிறார்? தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப்போகிறாரா? இல்லை, ஓட்டு கேட்டு வரப்போகிறார். ஓட்டு கேட்டு வருவதை நான் தவறு என்று சொல்ல விரும்பவில்லை.

சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்தபோது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா?

குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரே. மறுநாளே, நிவாரண நிதி கொடுத்தாரே. குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கிறேன்.

குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழ்நாட்டிற்கு 3 மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள்.

நாம் கேட்டுக் கொண்டே இருப்பது என்ன? மத்திய அரசுக்கு அதிக வரி வருவாய் எங்கிருந்து போகிறது? நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து போகிறது. நம்முடைய பணம் தான் போகிறது. ஆனால், அதற்கேற்ற மாதிரி திருப்பி தருகிறார்களா? நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசா தான் மறுபடியும் நமக்கு வருகிறது. அதையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா? இல்லை.

பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். தேசபக்தியை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை.

இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த நாங்கள், உலகின் தலைசிறந்த கூட்டாட்சி நாடாக, மக்களாட்சி நாடாக இந்தியா வளர்ந்து, வளம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

மக்கள் கேட்கிறார்கள்

தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். இது என்ன நியாயம்? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கேட்கிறார்கள்? 10 ஆண்டுகளில் என்ன சிறப்புத் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். பதில் கூறுங்கள் பிரதமரே என்று மக்கள் கேட்கிறார்கள், நாங்கள் கேட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள்.

தமிழ்நாட்டை சீரழித்த அண்ணா தி.மு.க.வையும், தமிழ்நாட்டை கண்டுகொள்ளாத மத்திய பாரதீய ஜனதாவையும் மக்கள் நிராகரிக்க தயாராகிவிட்டார்கள். அதுதான் இந்த காட்சி, இந்த சாட்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் திராவிட மாடல் அரசும், உங்களுக்காக எந்நாளும் உழைக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் இருக்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக, இந்தியாவையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்நாட்டு மக்களான நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கு துணை நிற்க, அழைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ப்போம், இந்தியாவை காப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சி.வி.கணேசன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, இரா.கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, இ.பரந்தாமன், ஜான் எபிநேசர், அ.வெற்றியழகன், ஜட்ரீம் மூர்த்தி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார்,

சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *