செய்திகள் நாடும் நடப்பும்

வாக்குப் பதிவு மேன்மைக்கு வலு சேர்க்கும் பிளாக் செயின் தொழில் புரட்சி


‘வை.மை’ வரும் நல்ல தலைமை – பாகம் 10 : ஆர்.முத்துக்குமார்


தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்திய வங்கித்துறை உலகிற்குமே நல்ல முன் உதாரணமாக இருப்பதை அறிவோம். ஜப்பான் நாட்டு பிரதமர் சென்ற ஆண்டு அரசு முறை சுற்றுப் பயணமாக நம் மண்ணிற்கு வந்த போது, ‘அட டீ கடைகளிலும் டிஜிட்டல் முறையில் QR CODE முறையில் பரிவர்த்தனையா?’ என வியந்து பாராட்டியதுடன் அப்படி ஒரு புரட்சியை ஜப்பானில் கொண்டு வர நமது தொழில்நுட்பங்களை பெற வேண்டுகோளும் வைத்தது நினைவிருக்கலாம்!

நாம் தொழில் புரட்சி காலக்கட்டத்தில் அதன் வளர்ச்சிகளில் பின் தங்கியிருந்தோம். நீராவி என்ஜின்கள் உருவாகி உற்பத்தி துறையும் சரக்கு போக்குவரத்து துறையும் கண்ட பல முன்னேற்றங்களில் சுமார் 100 ஆண்டுகள் பின்தங்கி இருந்தோம். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காரணத்தால் மெல்ல அவை நமது சமுதாயத்தில் நுழைந்தது.

ஆனால் இன்றைய டிஜிட்டல் புரட்சியின் முன்னேற்றங்களில் நாம் முன் நிற்பதுடன் அதன் உபயோகத்திலும் பின்தங்கி விடவில்லை.

இத்தகைய வளர்ச்சிகளின் பயனாக இன்று நாம் உலக பொருளாதார வளர்ச்சி பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்து விட்டோம்.

ஆனால் தனி நபர் வருவாயில் நாம் 160வது இடத்திற்கும் பின்னால் இருக்கிறோம். தற்போதைய தனி நபர் வருமானம் சராசரியாக வருடத்தின் அடிப்படையில் ரூ.1.65 லட்சமாக இருக்கிறது. இதை அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.11 லட்சமாக உயர்த்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

அதற்கு உந்துதல் தரப்போகும் ஓர் முக்கிய தொழில் புரட்சி டிஜிட்டல் தொழில்நுட்பங்களாகும். குறிப்பாக பிளாக்செயின் என்ற செயல்திறன் என்பது தான் உண்மை!

நமது சாப்ட்வேர் திறன் உலகமே வியந்து பாராட்டி வந்ததை மறக்க முடியாது.

ஆனால் அவையாவும் எளிதில் பிறர் உள்நுழைந்து அதில் பலவித தப்புக்களை செய்திட வழியிருந்து கொண்டு மேம்பட்ட வளர்ச்சிகளுக்கு வழியின்றி இருந்தது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இத்திருட்டுக்கள், குறிப்பாக வங்கிக் கணக்கு ‘ஹாக்கிங்’ செய்திகள் குறைந்து விட்டதை கண்டோம்.

இதற்கெல்லாம் Big Data, Block Chain தொழில்நுட்ப வரவுகள் தந்த பாதுகாப்பு உன்பதை உணர துவங்கி விட்டோம்.

இனி ரூபாய் நோட்டுக்களை பார்க்கக் கூட வேண்டியது அறவே இருக்கப்போவதில்லை. எல்லாம் டிஜிட்டல் மய சமாச்சாரமாக மாறிவிடும்.

இதுபற்றிய விழிப்புணர்வுக்கு உங்கள் கையில் தவழும் ‘மக்கள் குரல்’ நாளிதழில் தினமும் ‘வருவது புரிகிறதா?’ என்ற பகுதியில் புதுயுக தொழில் நுட்பங்கள் பற்றியும் அதன் பயனாக நமக்கு கிடைத்து இருக்கும் கிரப்டோ கரன்சி டிஜிட்டல் பணம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம்.

வரும் ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி அடுத்த பிரதமர் யார்? ஆட்சியை பிடித்து இருக்கும் கட்சி எது? என்பது தெரிய வந்து புது ஆட்சியாளர்களும் அடுத்த தலைமுறை செயல் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த பணியாற்ற துவங்கி விடுவார்கள்.

உடனடியாக செய்ய வேண்டிய பெரும் பணிகளில் ஜனத்தொகை கணக்கெடுப்பும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் விவகாரமும் இருக்கப் போகிறது. தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான மொத்த செலவினம் ரூ.1.35 லட்சம் கோடியை தொடும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

இது 2019 –ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகம் ஆகும். 2019 தேர்தலுக்கு ரூ.60 ஆயிரம் கோடி செலவிடப்பட்டதை ஊடக ஆய்வு மையத்தின் தலைவர் பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய 4 மாதங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசு தேர்தல் ஆணையம் என நேரடியாக மற்றும் மறைமுகமாக தேர்தலுக்காக செலவிடப்படும் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கிய கணக்கீடு இது.

தேர்தல் ஆணையம் இப்படி ரூ.1.35 லட்சம் கோடியை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வதுடன் வாக்குப் பதிவு விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் கெட்ட பெயர் தான் சம்பாதிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

இனியாவது தாமதிக்காமல் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நவீன பிளாக் செயின் தொழில் வல்லமையுடன் புதிய ஆன்லைன் வாக்குப் பதிவு முறைக்கு வழிகாட்டும் உத்தரவுகளும் வரும் என்று நாடே எதிர்பார்க்கிறது.

அப்படிப்பட்ட தொழில் நுட்பங்களின் வருகையால் நமது ஜனநாயகம் துவழ்ந்து விடாமல் என்றும் இளமையுடன் செயல்படும்.

ஆன்லைன் சமாச்சாரம் ஆரம்பத்தில் பெரிய முதலீடாய் இருந்தாலும் விரைவில் பல லட்சம் கோடி செலவீனத்தை குறைத்து விடும், நமது பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *