செய்திகள்

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி

மும்பை, ஏப். 03–

மகாராஷ்டிராவில் ஐந்து கட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்கும் நிலையில், பாரதீய ஜனதா கூட்டணியில் இன்னும் தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் 90 சதவீதம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. ஆனாலும் சில தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அதேவேளை, மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பா.ஜ.க 29 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே போட்டியிடுவதற்காக ரத்னகிரி தொகுதியை பா.ஜ.க கேட்டுக்கொண்டிருக்கிறது. இத்தொகுதியில் தற்போது எம்.பி-யாக இருப்பவர் உத்தவ் தாக்கரே அணியில் இருக்கிறார். ஆனாலும் இத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா (ஷிண்டே) அடம்பிடிக்கிறது. அத்தொகுதியில் சிவசேனா அமைச்சர் உதய் சாவந்த் சகோதரர் கிரண் சாவந்த்தை போட்டியிட வைக்க சிவசேனா முயன்று வருகிறது. சிவசேனா ஆதரவு கொடுக்காவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்று நாராயண் ரானே கூறிக்கொண்டிருக்கிறார்.

10 தொகுதிகளில் மோதல்

நாசிக் தொகுதியில் இப்போது சிவசேனாவின் கோட்சே எம்.பி-யாக இருக்கிறார். அவர் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அத்தொகுதிக்கு தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) உரிமை கோரிக்கொண்டிருக்கிறது. மாநில அமைச்சர் சகன் புஜ்பாலை இங்கு நிறுத்த அஜித் பவார் திட்டமிட்டுள்ளார். இப்படியாக 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணியில் மோதல் நடந்து வருவதால், தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

மற்றொரு புறம் எதிர்க்கட்சி கூட்டணியிலும் இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை. சரத் பவார் சற்று இறங்கி வந்து பிவாண்டி தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் அத்தொகுதி பிரச்னை முடிந்துவிட்டாலும், வடக்கு மும்பை தொகுதியையும் சிவசேனா (உத்தவ்) கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி ஓரிரு தொகுதிகளில் மட்டும் தொகுதிப்பங்கீடு முடியவில்லை என்றாலும், சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *