செய்திகள்

கார், மோட்டார் சைக்கிள் கூட இல்லாத மிகப்பெரிய கோடீஸ்வர வேட்பாளர்கள்

சென்னை, மார்ச் 27–

வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ரூ.152 கோடி சொத்து இருந்தும், சொந்தமாக கார் இல்லை என்று கூறி தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் கூறியுள்ளதைப் போல, ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ரூ.650 கோடி சொத்துக்கள் இருந்தும் காரோ, மோட்டார் சைக்கிளோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வேலூரில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் ரூ.89 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளதில், 5 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்த ஏ.சி.சண்முகம், சொத்து மதிப்பாக ரூ. 152 கோடி பதிவு செய்துள்ளார். பல்வேறு வங்கிகளில் உள்ள இருப்புத் தொகை, வைப்புத் தொகை, பங்கு முதலீடு, நகை என்று அசையும் சொத்துகளாக ஏ.சி.சண்முகத்திடம் ரூ. 36 கோடியும் மனைவி லலிதா லட்சுமியிடம் ரூ. 37 கோடியும் உள்ளது.

கார், பைக் இல்லை

வேலூர், ஆரணி, பெங்களூர்,சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலங்கள், காலிமனைகள், கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று ஏ.சி.சண்முகம் பெயரில் அசையா சொத்து ரூ 7.43 கோடி மதிப்பிலும், லலிதா லட்சுமியின் பெயரில் ரூ 16.02 கோடியும் அசையா சொத்துகள் உள்ளன. ஏ.சி. சண்முகம் பெயரில் 8 அடுக்குமாடி குடியிருப்புகளும் அவருடைய மனைவி பெயரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. ஆனால், இவர் பெயரிலும் மனைவி பெயரிலும் கார்கள், பைக் ஏதும் சொந்தமாக இல்லையாம்.

அதேபோல், ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில், தனக்கும் தன் மனைவிக்கும் ரூ.650 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், தன்னிடம் காரோ, மோட்டார் சைக்கிளோ இல்லை என்று தெரிவித்துள்ளார். அதேவேளை, திமுக வேட்பாளர் பிரகாஷ் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி படிவத்தில் ரூ. 5 கோடி அளவுக்கு சொத்து காட்டியுள்ளதில், மொத்தம் 3 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *