செய்திகள்

இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்: ஆய்வில் தகவல்

சென்னை, அக்.25-–

இந்தியாவில் பாதுகாப்பான மாநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது என்று செர்பியா நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

‘கூகுள்’ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், போஸ்னியா-ஹெர்சகோவினா, பஞ்ஜா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக். இவர், செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நம்பியோ’ என்ற தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் அவர், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார். பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 127-–வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘அவ்தார்’ என்ற நிறுவனம், ‘வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. இதில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் சென்னை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருப்பது சென்னை போலீசாரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சென்னை போலீஸ் மாநகர மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்து வருகிறது என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *