செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டு: இந்திய வீரர்கள் 10 தங்கம் உள்பட 39 பதக்கங்கள் வென்ற அபாரம்

வட்டு எறிதலில் தமிழக வீரர் முத்து ராஜா வெண்கல பதக்கம்: முதலமைச்சர் வாழ்த்து

ஹாங்சோ, அக். 25–

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வீரர்கள் 10 தங்கம் உள்பட 39 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் முத்து ராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஹாங்சோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 4வது சீசன் நடைபெற்று வருகின்றன. 28–ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது. இந்தியா சார்பில் 191 வீரர், 112 வீராங்கனைகள் உள்பட மொத்தம் 303 பேர் பங்கேற்றனர். கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.

தமிழ வீரர்

முத்துராஜா

முதல் நாள் போட்டியின்போது இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-ம் நாள் போட்டியின்போது ஆண்களுக்கான வட்டி எறிதல் எப்54/55/56 பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என்று கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற நீரஜ் யாதவ் தங்கம் வென்றார். யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கமும், தமிழக வீரர் முத்துராஜா வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியுள்ளனர். இதே போன்று நடந்த ஆண்களுக்கான 5000 மீ T13 தடகளப் போட்டியில் ஷரத் மகான்ஹள்ளி 0.1 வினாடிகளில் தங்கப் பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவர் 5000 மீ தூரத்தை 20:18:90 நிமிடங்களில் கடந்துள்ளார். நேற்று இந்தியா 10 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று மொத்தமாக 35 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான எப்64 ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித் அன்டில் 73.29 மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி புதிய உலக சாதனையையும் படைத்தார்.

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் 62.06 மீ தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலமாக அவர் 2 பதக்கங்கள் கைப்பற்றியுள்ளார்.

தற்போது வரை இந்திய அணி 10 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

முதலமைச்சர் வாழ்த்து

வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் முத்துராஜாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

பாரா ஆசிய விளையாட்டு 2023–ல் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வரிசையில், வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துராஜா அவர்களுக்கு எனது பாராட்டுகள். முத்துராஜா மென்மேலும் சாதித்து அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் வெல்ல வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *