செய்திகள்

இதுவரை 8 கிலோ தங்கக்கட்டிகள், ரூ.59 லட்சம் ரொக்கம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னை, மார்ச் 26–

தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்களின் மூலம் இதுவரை ரூ.5 கோடியே 26 லட்சத்து 42 ஆயிரத்து 775 – மதிப்பிலான 7,999 கிராம் (8 கிலோ) தங்கக்கட்டிகள் மற்றும் ரூ.59 லட்சத்து 13 ஆயிரத்து 350 ரொக்கம்- பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19–ந் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதனடிப்படையில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட வடசென்னை, தென்சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19–ந் தேதி அன்று நடைபெறவுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16.3.2024 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, பொது இடங்களிலிருந்த 63 ஆயிரத்து 482 சுவர் விளம்பரங்கள், 14,183 சுவரொட்டிகள், 602 பதாகைகள் மற்றும் இதர வகையான 1,210 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், தனியார் இடங்களில் இருந்த 5,635 சுவர் விளம்பரங்கள், 7,757 சுவரொட்டிகள், 609 பதாகைகள் மற்றும் இதர வகையான 1,033 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் 24–ந் தேதி அன்று மாலை 6 மணி முதல் நேற்று (25–ந் தேதி) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக முறையாக ரசீது இல்லாமல், அண்ணாநகர் தொகுதியில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 400 தேர்தல் பறக்கும் படை மூலமும், நிலைக் கண்காணிப்புக் குழுவின் மூலம் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.65 ஆயிரத்து 500-, தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.3 லட்சத்து 9 ஆயிரம்-, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்- என மொத்தம் ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 500 – கைப்பற்றப்பட்டு கருவூலங்களில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.59 லட்சத்து 13 ஆயிரத்து 350 – மற்றும் ரூ.5 கோடியே 26 லட்சத்து 42 ஆயிரத்து 775 – மதிப்பிலான 7,999 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சி விஜில் கைபேசி

செயலியில் புகார்

இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை அளிக்க உருவாக்கப்பட்ட C-Vigil என்னும் கைபேசி செயலி மூலம் இதுவரை 105 புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க உருவாக்கப்பட்ட மாவட்ட தகவல் மையத்தில் இதுவரை 2,699 தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு அனைத்திற்கும் முறையான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *