செய்திகள்

நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை, பிப்.23-

நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட்டசபையில் நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

பொருளாதாரத்தைப் பற்றியும், நிதி மேலாண்மை பற்றியும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லாமல், பரபரப்பை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன், அரசின் கடன் அளவைப் பற்றி தவறான கருத்துகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.

எந்த ஒரு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போதும், அந்த காலகட்டத்திற்கு ஏற்ப அதைப் பார்க்க வேண்டும். நாங்கள் 10 ஆண்டு காலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நீங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளீர்கள் என்று கூறுவது தவறு.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், 2011-ம் ஆண்டு பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.1.02 லட்சம் கோடி தான்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.7.51 லட்சம் கோடிதான். இன்று, பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.4.12 லட்சம் கோடி; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.31.55 லட்சம் கோடியாகும்.

இந்த அடிப்படையை கொண்டு, கடனைப் பொறுத்தவரை, அதை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட வேண்டும். அதாவது, மாநிலத்தின் பொருளாதாரம் வளர வளர, அதன் கடன் வாங்கும் திறனும், அதை திருப்பிச் செலுத்தும் திறனும் அதிகரிக்கும்.

அந்த வகையில் 15-வது நிதிக்குழு, தமிழ்நாட்டிற்கு கடன் அளவு குறித்த சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி, நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம். மத்திய அரசு இவ்வாறு நம் நிதிநிலையைப் பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தாலே, நமது கடன் இந்த ஆண்டு சுமார் ரூ.26,117 கோடியும், அடுத்த ஆண்டு ரூ.26,442 கோடி அளவுக்கும் குறைந்திருக்கும்.

நீங்கள் (அ.தி.மு.க.) 10 வருடம் ஆட்சிசெய்த காலத்தில் மூலதனச் செலவிற்காக ரூ.16,732 கோடி மட்டுமே உயர்த்தியுள்ளீர்கள். ஆனால், நாங்கள் கடும் நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் கூட, மாநிலத்தின் வளர்ச்சியை ஈட்டும் மூலதனச் செலவிற்காக கடந்த 3 வருடத்திலேயே ரூ.33,068 கோடியாக இருந்ததை, ரூ.12 ஆயிரம் கோடியில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் உட்பட ரூ.59,681 கோடியாக உயர்த்தி, பணிகள் மேற்கொண்டு வருகிறோம். வெறும் 3 ஆண்டுகளில், நாங்கள் மூலதனச் செலவினத்தை ரூ.26,613 கோடி உயர்த்தியுள்ளோம்.

கூட்டுக் குடிநீர் திட்டம்

தற்போது, சென்னை மாநகராட்சியில் ரூ.63,246 கோடி மதிப்பீட்டிலும், கோவை மாநகராட்சியில் ரூ.10,740 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகராட்சியில் ரூ.11,368 கோடி மதிப்பீட்டிலும் மெட்ரோ ரெயில் திட்டங்கள், நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ரூ.9,535 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சாலை மற்றும் பாலங்கள் மேம்பாட்டிற்காக ரூ.17,890 கோடி, போக்குவரத்துத் துறைக்கு ரூ.2,966 கோடி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த ஆண்டு, தொடர்ச்சியாக 2 பேரிடர்களைச் சந்தித்ததால், 20.61 சதவீதம் என எதிர்பார்த்த வருவாய் வளர்ச்சி 13.26 சதவீதமாகக் குறைந்துள்ளது. வரி வருவாயின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மாநில சரக்கு மற்றும் சேவை வரியில் அதிகளவிலான வளர்ச்சியை தமிழ்நாடு தொடர்ந்து அடைகிறது. ஆனால், ஆய்வு செய்ததில், மாநிலத்தில் வழங்கப்படும் இணையவழி சேவைகளுக்கான வரி மாநிலத்திற்கு கிடைப்பதில்லை.

வரி வருவாய் உயரும்

இதனை, பகுப்பாய்வு செய்வதற்காக பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை ஜி.எஸ்.டி. குழுவில், இதுகுறித்து விரைவில் விவாதிக்க நமது அரசு முயலும்.

மேலும், பல்வேறு சீர்திருத்தங்களை வரி வருவாய் திரட்டும் துறையில் எடுத்து வருகிறது. ஐ.ஐ.டி. ஜதராபாத் தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட ஸ்டார் 3.0 இணையசேவை பதிவுத் துறையில் செயல்படுத்த உள்ளோம். சுரங்கத்தில் டிரோன் தொழில்நுட்பம் மூலம் அளவினை கணக்கிடுவதை மேற்கொண்டுள்ளோம். எதிர்வரும் நிதியாண்டில் வரி வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *