செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு உதவி செய்ய தயார்

அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை, ஜன.7–

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லவேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வரப்பெற்றால் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் செல்வதற்குண்டான உதவிகளை செய்வதற்கு இந்து சமய அறநிலைத்துறை தயாராக இருக்கின்றது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிசுவாமி கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், அரசு இசைக் கல்லூரி மற்றும் இராஜா அண்ணாமலை மன்றம் தமிழ் இசை கல்லூரியைச் சேர்ந்த 108 மாணவ மாணவியர் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

நிறைவாக, அமைச்சர் சேகர்பாபு திருப்பாவை பாராயணம் செய்திட்ட மாணவ, மாணவியருக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து நடத்திட்ட தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் சௌமியா, பேராசிரியர்கள் நிரஞ்சனா, லலிதா, வெங்கடேஷ், ஹரிஷ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

திராவிட மாடல் ஆட்சியில் கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 17 கோயில்களுக்கும், நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 8 கோயில்களுக்கும் விரிவுப்படுத்தி உள்ளோம். மேலும், நாள்முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி 20 கோயில்களில் செயல்படுத்தி வருகிறோம்.

கோயில்கள் சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுப்பயணமாக கடந்தாண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்கான மொத்த செலவினத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்று செயல்படுத்தி வருகிறது.

வள்ளலாருக்கு முப்பெரும் விழாவை நடத்தி பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்திட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் பிப்ரவரி மாதத்தில் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

முதலமைச்சர் உத்தரவின்படி, திருவான்மியூர், பாம்பன் குமரகுருபர சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டினை சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி 1967–ம் ஆண்டில் வெளியிடப்பட்ட பாம்பன் சுவாமிகளின் வரலாற்று புத்தகத்தை புதுப்பொலிவோடு மீண்டும் மறுபதிப்பு செய்து வெளியிட உள்ளோம்.

அன்றைய நிகழ்ச்சியில் 108 இசைக் கல்லூரி மாணவ, மாணவியர் பாம்பன் சுவாமிகளால் பாடப்பட்ட சண்முக கவசம் மற்றும் குமாரஸ்த்தவம் ஆகியவற்றை பாராயணம் செய்யும் நிகழ்வும், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுவதோடு, நாள் முழுவதும் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வரப்பெற்றால் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் செல்வதற்குண்டான உதவிகளை செய்வதற்கு இந்து சமய அறநிலைத்துறை தயாராக இருக்கின்றது.

கலைஞர் சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, உழைக்கும் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்மொழிக்கும் 80 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து பெருமை சேர்த்தவர் ஆவார். தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் உயர்வுக்கும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயர் வைத்ததில் எந்த தவறும் இல்லை.

நாவலரின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடினோம். தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் உழைத்திட்ட தலைவர்களுக்கு பெருமை சேர்ப்பதே முதலமைச்சர் தலைமையில் இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சியாகும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, துணை ஆணையர் சி.நித்யா மற்றும் மாநகராட்சி உறுப்பினர் காமராஜ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *