செய்திகள்

சொந்த ஊரில் ஓட்டுப்போட வசதியாக தமிழகம் முழுவதும் 18,518 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை, ஏப்.9-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சொந்த ஊரில் ஓட்டுப்போட வசதியாக தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 518 சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்துத்துறை ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேற்கொண்ட ஆலோசனைப்படி வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 சிறப்புப் பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7 ஆயிரத்து 154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தேர்தல் முடிந்த பின்னர்…

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், ஆயிரத்து 825 சிறப்புப் பஸ்களும் 2 நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 6 ஆயிரத்து 9 பஸ்கள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2 ஆயிரத்து 295 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 8 ஆயிரத்து 304 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேசுவரம், சேலம், கோவை, எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் (அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் உள்பட) தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து ஒரகடம் வழியாக காஞ்சீபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பஸ்கள் தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக (அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பஸ்கள் உட்பட) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பஸ்கள் மற்றும் பூந்தமல்லி வழியாக காஞ்சீபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

முன்பதிவு

சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள ஆன்லைன் வசதியான tnstc அதிகாரப்பூர்வ செயலி மற்றும் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை உள்ள நாட்களில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *