செய்திகள்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் அமைக்க உறுதுணையாக இருக்கவேண்டும்

மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை, ஜன.7-–

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முன்ஞ்பாரா மகேந்திரபாயிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்தார்.

சென்னை பள்ளிக்கரணையில், கேப்டன் சீனிவாசன் மூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் வைரவிழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முன்ஞ்பாரா மகேந்திரபாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் மைதிலி கே.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:–-

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்புகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சித்தா கோவிட் கேர்’ சென்டர்களை அமைத்து மக்களின் உயிர்காத்த பெருமை இத்துறைக்கு உண்டு.

மத்திய அரசின் ஆயுஷ்துறை தமிழ்நாடு அரசு வைக்கும் நிதி தொடர்பான கோரிக்கைகளுக்கு எந்தவித தாமதமும் இல்லாமல் நிதி ஆதாரத்தை தந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரையில் உள்ள பழமையான ஆயுர்வேதா கல்லூரிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டிடம் கட்டும் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு மூலிகைகள், மூலிகை பயிர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளஞ்சி மன்றம் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளார்கள். இந்த திட்டத்தை மேலும் விரிவடைய செய்யும் நோக்கில், ‘தொழிலாளர்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் நாளை (அதாவது இன்று) திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கவர்னரிடம் பல்வேறு மசோதாக்கள் கிடப்பில் இருப்பதுபோல் சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவும் கிடப்பில் உள்ளது. எனவே, சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் வருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதேபோல, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதை போல, திருச்சியில் சித்த மருத்துவத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். இந்த 2 கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பேசி நிறைவேற்றித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *