செய்திகள்

50 வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து ஐசிஎப் சாதனை

தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காஷ்மீருக்கு சிறப்பு ரக ரெயில் உற்பத்திக்குத் திட்டம்

பொது மேலாளர் பி.ஜி. மால்யா தகவல்

சென்னை, ஜன. 26–

ஐசிஎப் விளையாட்டரங்கில் இன்று (26ந் தேதி) 75வது குடியரசு தின விழா தேசிய உணர்வோடு கொண்டாடப்பட்டது. பொது மேலாளர் பி.ஜி. மால்யா, தேசியக் கொடி ஏற்றி ஐசிஎப் ஆய்வாளர் மாருதி பி. கோலாவே தலைமையிலான ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் அங்கு குழுமியிருந்த ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் முன்னிலையில் உரையாற்றுகையில் நமது அரசியல் சட்டத்தின் திடமான தன்மை காரணமாக, நம்மிடையே பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், இந்தியா ஒற்றுமையாக வாழும் குடியரசிற்கான சிறந்த முன்னுதாரணமாக விளங்குவதாக சொன்னார்.

இந்திய ரெயில்வேயின் ஒரு பகுதியாக ஐசிஎப் பல்வேறு மேம்பாடுகளை மேற்கொண்டு, இந்திய ரெயில் பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் பெரும் பங்காற்றுவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டில் ஐசிஎப் ரெயில்பெட்டிகள் தயாரிப்பதில் தலைசிறந்த நிறுவனம் என்ற விருதை நகர் கட்டமைப்பு வணிகத் தலைமை நிறுவனத்திடம் பெற்றிருப்பதாகவும், ஐசிஎப்பின் உலோக ஆய்வுக்கூடம், இந்தியாவின் தலைசிறந்த ஆய்வு நிறுவனமான தேசிய ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட சான்றிதழ் அமைப்பில் இருந்து சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ஐசிஎப் கடந்த ஆண்டில் “50வது வந்தே பாரத் ரெயில் தொடரை” பல்வேறு சவால்களுக்கிடையில் தயாரித்துள்ளதாகவும், சாமானிய ரயில் பயணிகளுக்கு முன் எப்போது இல்லாத வகையில் சுகமாக ரெயில் பயணம் செய்ய “அம்ரித் பாரத் ரெயில் தொடரை” சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலையுடன் இணைந்து தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐசிஎப் நிர்வாக அலுவலக வளாகத்தில் ஐ லவ் ஐசிஎப் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சூரிய சக்தி மரம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் ஐசிஎப், 2 முக்கிய ரெயில் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். முதலாவதாக முழுவதும் குளிர்வசதி செய்யப்பட்ட நடுத்தர தொலைவு கொண்ட நகர்களுக்கிடையே ரெயில் பயணிகள் பயணம் செய்ய வசதியாக “வந்தே மெட்ரோ ரெயில் தொடர்’’ மற்றும் “ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காக அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரெயில் தொடர்” ஆகியவை தற்போது தயாரிப்பில் உள்ளதாகவும், அவை விரையில் தயாரித்து இந்திய ரெயில்வே இயக்கத்திற்கு அனுப்பப்படும் என்றும் ஐசிஎப் பொதுமேலாளர் தெரிவித்தார்.

விழாவின் நிறைவாக ஐசிஎப் ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ஐசிஎப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தொழில் பயிற்சிப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *