போஸ்டர் செய்தி

ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கேள்வி

கரூர், மே.13–

தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனை சொல்லி ஸ்டாலின் ஓட்டு கேட்க முடியுமா? என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டார்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நேற்று (12–ந் தேதி) கரூர் மாவட்டம், புகளூர் நான்கு ரோட்டில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்த போது பேசியதாவது:–

தமிழகத்தை பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்திருக்கிறது, தமிழ்நாட்டில் காங்கிரசும் ஆட்சி செய்துள்ளது, தி.மு.க.வும் ஆட்சி செய்துள்ளது, ஆனால் இதில் அம்மா ஆட்சி செய்த காலம் தான் பொற்கால ஆட்சியாக, நாட்டுமக்களுக்கு நல்லபல திட்டங்களை அர்பணித்த ஆட்சியாக, தொலைநோக்கு திட்டங்களை மக்களுக்கு வழங்கியது அம்மா ஆட்சியில் தான் என்பது நமக்கெல்லாம், நன்றாக தெரியும்,

அம்மா 2011–ல் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது மக்களுக்கு நல்ல திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, தொலைநோக்கு திட்டம் என்றால் நம் எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக்கூடிய வகையில் உள்ள திட்டங்களை அம்மா பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தார். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இதை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிறைவாக செய்யவேண்டுமென்று என்று எண்ணிதான், 20 கிலோ அரிசியை மாதந்தோறும் விலையில்லா அரிசியாக வழங்கினார்.

கான்கிரீட் வீடுகள்

தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரிட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆக 2023–க்குள் தமிழகத்தை குடிசை பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக குடிசை பகுதிகளற்ற தமிழ்நாட்டை உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

பெண்களுக்கு திட்டங்கள்

புரட்சித்தலைவி அம்மா, பெண்கள் நாட்டின் கண்கள், என்று எண்ணினார், பெண்களின் பாதுகாப்பிற்கு, பெண்களின் முன்னேற்றத்திற்கு, அம்மா ஆட்சியில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்தையும், பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரம் ஆகவும், தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார். மீண்டும் தமிழகத்தில் 2016–ம் ஆண்டில் அம்மாவின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி, அம்மாவின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதா திட்டங்கள் தொடர்கிறது

பேறுகால நிதிஉதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்தது 2016–ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார், இன்று நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம்.

மேலும் பெண்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, மீண்டும் வீட்டில் பிள்ளைகளை பராமரிப்பது போன்று ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களுக்கு, அதுவும் தமிழகத்தில் நிறைய தாய்மார்கள் உள்ளனர் என்பதால் அம்மா அரசின் சார்பாக, பெண்களின் சுமையை குறைப்பதற்காக 5 ஆண்டுகாலமாக விலையில்லா அரிசி வழங்கி குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார்.

அம்மாவின் ஆட்சியில் உழைக்கும் மகளிர் பணிக்கு சென்று வருவதற்கு ஏதுவாகவும், பிள்ளைகளை பள்ளி அழைத்து சென்றுவருவதற்கு ஏதுவாகவும் மானிய விலை அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் நிறைவேற்றினார். இத்திட்டத்தினை அம்மாவின் வழியில் நடக்கும் அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டுவருகிறது. மத்திய அரசு விருது

விவசாயம் தான் நம்முடைய ஆதாரம், விவசாய புரட்சி செய்து, நெல் உற்பத்தியில் தமிழகத்தை, இந்தியாவிலேயே, தொடர்ந்து நான்கு வருடங்களாக முதலிடம் பிடிக்க வைத்து, மத்திய அரசால் வழங்கப்படும் கிருஷ்-கர்மா விருதினை பெற்று தந்துள்ளது.

எந்த சண்டை சச்சரவும், மதகலவரங்களே, சாதி சண்டையோ இல்லை, தமிழகம் அமைதிப் பூங்காவாக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார், பிரச்சாரம் செய்யட்டும், அவர்களின் ஆட்சியில் எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள், எந்த திட்டத்தை செய்து முடித்தார்கள் என்று கேளுங்கள்.

சாதனைகளை ஸ்டாலின் சொல்ல முடியுமா?

சாதனை சொல்லுங்க ஓட்டு கேளுங்க, திட்டத்தை சொல்லுங்க ஓட்டு கேளுங்க, ஆனால் ஒரே ஒரு திட்டம் மட்டும் சொல்றார், மே 23–ந் தேதிக்கு பிறகு ஆட்சி கவிழ்க்க படும் என்பதை தான் சொல்கிறார், இதை மட்டும் தான் சொல்லி ஓட்டு கேட்கிறார், சாதனையை ஏதாவது சொல்லி ஓட்டு கேட்கவில்லை, ஏனென்றால் எதுவும் செய்யவில்லை,

அம்மாவின் வழியில் தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறோம், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இன்னொன்று சொல்கிறார், இந்த அண்ணா தி.மு.க. அரசு இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என்றும், மக்கள் எல்லாம் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், 1972–ம் ஆண்டு முதல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் அண்ணா தி.மு.க.வினை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கப்பட்டது.

இன்றைக்கும் மாபெரும் தொண்டர்களின் இயக்கமாக உருவாகியுள்ளது. புரட்சித்தலைவி அம்மா 27 ஆண்டு காலமாக இயக்கத்தின் பொது செயலளாராக இருந்து, பல சோதனை, வேதனைகளை கடந்து இந்த இயக்கத்தினை நடத்தி, அம்மாவால் பாதுகாக்கப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட எஃகு கோட்டையாக உள்ளது.

அண்ணா தி.மு.க.வை அசைக்க முடியாது

கருணாநிதி, கூட்டாளிகளுடன் கூட்டு சேர்ந்து அண்ணா தி.மு.க.வை அழிக்க பார்த்தார், ஆனால் முடியவில்லை,

எந்த சுனாமி வந்தாலும் அசையாது, பூகம்பம் வந்தாலும் அசையாது, எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாதவாறு உள்ளது.

ஸ்டாலின் அவர்களே உங்கள் தந்தை கருணாநிதியாலேயே முடியவில்லை உங்களால் முடியுமா, என்ன, ஒரு போதும் உங்களால் முடியவே, முடியாது.

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். தமிழ்நாட்டினை தீ வைத்து கொளுத்த போவதாக பொய் பிரச்சாரம் செய்கிறார். நாங்கள் என்ன தீப்பந்தம் கடையா வைத்திருக்கிறோம்,

ஆனால் தி.மு.க. ஆட்சியில் தான் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, மாமன் மச்சான் சண்டையில் மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தினை எரித்து தீவைத்து கொளுத்தி மூன்று நபர்களை உயிரிழந்தார்கள், அக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வருகிறார்கள், பரோட்டா சாப்பிட்டு காசு கொடுக்கனுமா, வேணாமா, இன்னும், ப்யூட்டி பார்லர்ல வேற கலாட்டா. இது தான் தி.மு.க. திமுக ஆட்சியில் நில உரிமையாளர்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலங்களை அபகரித்ததை, அம்மா 2011–ம் ஆண்டில் ஆட்சியேற்ற பிறகு அந்நிலங்களை மீட்டு அந்தந்த உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

அம்மா ஆட்சியேற்றவுடன் ஒரே வருடத்தில் படிப்படியாக மின்வெட்டினை குறைத்து, மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கி, தற்போது உபரிமாநிலமாக, அண்டை மாநிலங்களுக்கு 3 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தினை வழங்கிக்கொண்ருக்கிறோம்.

முதல்வராக வரமுடியாது

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது, தமிழகமே இருளில் மூழ்கியிருந்தது, அனைத்து மாவட்டங்களிலும் மின்சார தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக ஆகிவிடலாம் என்று கனவு கண்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் கண்டிப்பாக அவரால் முதலமைச்சராக, ஆகவே முடியாது.

இப்போது, ப.சிதம்பரம் பேசுறார், இந்த ஓபிஎஸ் – இபிஎஸ்.யும் தூக்கி எறிய வேண்டும் என்று. அவர்தான் பத்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக முக்கிய துறைகளில் பதவி வகித்தார், நிதிஅமைச்சராக இருந்தார், பாதுகாப்பு அமைச்சராக இருந்தார், உள்துறை அமைச்சராக இருந்தார்.

அவரை பார்த்து நான் கேட்கிறேன், தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டுவந்து சேர்த்தீர்களா, உயிர்நாடியான காவேரி நதி நீர் பங்கிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண ஏதாவது நடவடிக்கை மேற்கெண்டீர்களா, அம்மா தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினையை தீர்க்க 2012–ம் ஆண்டு, பலமுறை டெல்லி சென்று, அன்றைய திமுக கூட்டணி ஆட்சியில் பாரத பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம், காவேரி நதிநீர் நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் (கெசட்) வெளியிடுவதற்கு பலமுறை வேண்டுகோளை விடுத்தார். அதுவும் பயனில்லாமல் போனது.

பிறகு உச்சநீதிமன்றம் சென்று வாதாடி, போராடி சட்டப்போராட்டம் நடத்தி அம்மா 2013–ம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர், அம்மா தான், ஆனால் அவர்களோ ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் அதை செய்யவில்லை,

இவ்வாறாக யார் ஆட்சியில் தமிழகத்தின் ஜீவதார பிரச்சினைகளை தீர்த்த தலைவராக, முதலமைச்சராக இருந்தார்கள், யார் நல்லாட்சி தந்தார்கள், யார் ஆட்சியில் நாட்டுக்கு நல்ல பல திட்டங்களை தந்தார்கள், யார் நல்லாட்சி செய்து மக்களுடைய அபிமானத்தை பெற்றார்கள்,

பிரிந்து சென்றவர்கள் உருப்பட்டார்களா?

புரட்சி தலைவர் காலத்திலிருந்து, புரட்சி தலைவி அம்மா இன்று வரை, அண்ணா தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கியும், ஜாதி கட்சி தொடங்கியவர்களும், யாராவது உருப்பட்டுள்ளார்களா, இல்லை,

ஆகவே, அரவக்குறிச்சி மக்களாகிய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும், செந்தில் பாலாஜியை வீழ்த்துவதற்கு இதுதான் சரியான வாய்ப்பு, வருகின்ற 4 தொகுதிகளின் சட்டமன்ற இடைத் தேர்தலில் அரவக்குறிச்சி வாக்காள பெருமக்களாகிய நீங்கள், 4 தொகுதிகளிலேயே அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வெற்றி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்துமாறும், செந்தில்பாலாஜியை டெபாசிட் இழக்க செய்யுமாறும், கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்றத்தின் பேரவையின் துணை தலைவர் மு. தம்பிதுரை, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி. தங்கமணி, டாக்டர். வி. சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *