செய்திகள்

வீராணம் ஏரி, கீழணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்: அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்தார்

Spread the love

சிதம்பரம், செப். 12–

வீராணம் ஏரி மற்றும் அணைக்கரை கீழணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்தார்.

மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 13-ந் தேதி அன்று பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணையிலிருந்து ஆகஸ்ட் 17ம் தேதி அன்று திறக்கப்பட்ட தண்ணீர் ஆகஸ்ட் 21ம் தேதி அன்று கீழணையை வந்தடைந்தது. அன்றே வடவார் மூலம் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை படிப்படியாக தேக்கிவைத்து பாசனத்திற்காக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

ராதா வாய்க்கால் மதகு (10 கன அடி விநாடிக்கு), வீராணம் புதிய மதகு (74 கன அடி விநாடிக்கு) வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகளும் திறக்கப்பட்டு அனைத்து மதகுகளிலும் சேர்ந்து மொத்தம் 400 கனஅடி விநாடிக்கு தண்ணீர் வழங்கப்படும்.

இதன் மூலம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுக்காக்களில் உள்ள 102 கிராமங்களில் மொத்தம் 44,856 ஏக்கர் பாசன பரப்புகள் பயனடையும். மேலும் அவ்வாறு பாசனதேவைக்கேற்ப தண்ணீரின் அளவு மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிகளில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், சார் ஆட்சியர் விசுமகாஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, சிதம்பரம் செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர்கள் அருணகிரி, குமார், ரமேஷ் சிதம்பரம் தாசில்தார் அரிதாஸ், காட்டுமன்னார் கோயில் தாசில்தார் தமிழ்செல்வன் மற்றும் விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கீழணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர்

இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்து, பின்னர் கீழணையை வந்தடைந்தது. கீழணை வந்தடைந்த தண்ணீரை அணையில் தேக்கப்பட்டு பாசனத்திற்காக கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு விகித்தாச்சாரம் அடிப்படையில் வடவாறு வாய்க்காலில் (1800 கனஅடி விநாடிக்கு), வடக்குராஜன் வாய்க்கால் (400 கனஅடி விநாடிக்கு), தெற்குராஜன் வாய்க்கால் (400 கனஅடி விநாடிக்கு) மாவட்ட கலெக்டர்கள் வெ.அன்புச்செல்வன் (கடலூர்), சீ.சுரேஷ்குமார் (நாகப்பட்டினம்), அண்ணாதுரை (தஞ்சாவூர்) ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

இதனால் கீழணையிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு நேரடி பாசனமாக கொள்ளிடம் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன்கொல்லை வாய்க்கால் மற்றும் வடவார் வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட மொத்தம் 47,997 ஏக்கர் பாசன பரப்புக்கும் மற்றும் நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் தெற்குராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் வாய்க்கால், மேலராமன் வாய்க்கால் மற்றும் வினாயகன்தெரு வாய்க்கால் வாயிலாக நேரடி பாசனமாக மொத்தம் 39,050 ஏக்கர் பரப்பிற்கும் ஆக மொத்தம் 87,047 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்படும்.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *