சிறுகதை

வாழ்க்கை முதலீடு | ராஜா செல்லமுத்து

Spread the love

‘‘பழம்.. பழம்.. மாதுளம் பழம்… ஒரு கிலோ நூறு ரூபா… ரெண்டு கிலோ நூத்தி எண்பது….பழம்.. பழம் ..மாதுளம் பழ… ’’மென்று தொண்டைத் தண்ணி வற்ற வற்றக் கத்திக்கொண்டே சென்று கொண்டிருந்தான் முனியப்பன்.

அவனை என்ன வென்று கேட்கக்கூட ஆள் இல்லையென்றாலும் தெருத்தெருவாக அவன் கூவும் சத்தம் நின்றபாடில்லை.

‘‘ஏப்பா ரெண்டு கிலோ எவ்வளவு..? என்றாள் ஒரு குடும்பப்பெண்.

‘‘ரெண்டு கிலோ நூத்தி எண்பதுங்க’’

‘‘ஓ.. அப்பிடியா அப்பிடின்னா ஒரு கிலோ தொண்ணூறு ரூவான்னு குடு’’ என்று வாதம் செய்ய….

‘‘இல்லங்க. ஒரு கிலோ நூறு ரூவா ; ரெண்டு கிலோ தான் நூத்தி எண்பது’’ என்று தன் வியாபார உத்தியை அந்தப் பெண்ணிடம் முனியப்பன் சொல்ல…

‘‘அது எப்பிடிங்க ரெண்டு கிலோ நூத்தி எண்பதுன்னா ஒரு கிலோ தொண்ணூறு தானே வரணும்’’ என்று தன் கணக்கறிவைக் காட்டினாள் அந்தப் பெண்மணி

‘‘அம்மா ஒரு கிலோ நூறு ரூபா தான்! ரெண்டு கிலோ தான் நூத்தி எண்பது ! வாங்குனா வாங்குங்க இல்ல ஆளவிடுங்க’’ என்று முனியப்பன் சொன்னதும்

‘‘ம்…க்கும். அவரு பெரிய ஏவாரி. மொத்தம் எவ்வளவுய்யா வச்சுருக்க . என்ன ஒரு பத்துகிலோ மாதுளம் பழம் இருக்குமா..? அத வச்சுட்டு பொழப்பு பொழச்சிட்டு இருக்க. உனக்கு அவ்வளவு அதப்பா’’ என்று ரொம்பவே கேவலமாகப் பெசிக்கொண்டே முன் வந்தான் அந்தப் பெண்ணின் கணவன்.

அதைக் கேட்ட முனிப்பனுக்கு என்னவோ போலானது.

அவன் பேசிய பேச்சிற்கு மறுவார்த்தை ஏதும் பேசவே இல்லை.

‘‘என்ன நான் சொல்றது கேக்குதா..? என்று மேலும் அதட்ட அதற்கும் முனியப்பன் மூச்சுவிடவே இல்லை.

‘‘ஒரு கிலோ தொண்ணூறு ரூவான்னு கேட்டா குடுப்பியா! அதவிட்டுட்டு என்னமோ வியக்கியானம் பேசிட்டு உட்காந்திருக்க. குடுய்யா அவங்க கேட்ட வெலைக்கு’’ என்று மறுபடியும் அவன் அதட்ட அப்போதும் முனியப்பன் எதுவும் பேசவில்லை

‘‘என்னய்யா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு எதுவும் பேசாம எருமை மாடு மாதிரி நின்னுட்டு இருக்க’’ என்று எகிற

‘‘ஏங்க அவன்கிட்ட போயி பேசிட்டு இருக்கீங்க. நாமளும் அவனும் ஒன்னா போயிருவோம். அவன் கூட எதுவும் பேசாதீங்க . இவன் வச்சுருக்கிற மாதுளம் பழம் மொத்தமா ஆயிரம் ரூவா இருக்குமா..? இந்த ஆயிரம் ரூவாய வச்சுட்டு தெருத்தெருவா சுத்திட்டு இருக்கான். அவன் கிட்ட போயி பேசிட்டு இருக்கீங்க..’’ என்று அந்த இல்லத்தரசியும் எகிற அப்போது தான் முனியப்பனுக்குச் சுரீரென்றது.

‘‘பேசி முடிச்சிட்டீங்களா..? இல்ல இன்னும் பேச வேண்டியது எதுவும் இருக்கா..? நான் பேசாம போயிட்டு இருந்தவன கூப்பிட்டு பொருளயும் வாங்காம என்னோட வாழ்க்கைய பத்தியும் எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவு இழிவா பேசிட்டீங்க.

ம்.. இருக்கட்டும். நானா உங்ககிட்ட மாதுளம் பழம் வேணுமான்னு கேட்டேன். நீங்க தானே என்னைய கூப்பிட்டு கேட்டீங்க . பொருள வாங்குறதுக்கு என்னைய கூப்பிட்டது மாதிரி தெரியல. என்னோட பொருளாதாரத்த கேலி செய்றதுக்கே கூப்பிட்டது மாதிரி தெரியுது. என்ன சொன்னீங்க. நான் வச்சுருக்கிற பொருளோட மொத்த மதிப்பு ரூவா ஆயிரம் தான்

ம்.ம்.. என்ன செய்ய..? என்னோட மொத்த முதலீடு அது. என்னோட வாழ்க்கையோட அர்த்தம் ஆயிரத்துக்குள்ள தான் இருக்கு . ஆனா உங்கள மாதிரி வெட்கம், மானம், சூடு, சொரணை,சுயமரியாதைய எழந்திட்டு பொழப்பு பொழைக்கல. என்னோட உழைப்பில வேர்வையில கடினமான முயற்சியில இந்த வேலைய செய்றேன். நான் சம்பாதிக்கிற ஒவ்வொரு பத்து பைசாவுக்கும் ஒரு அர்த்தமிருக்கு. நான் சம்பாதிக்கிற இந்த பத்து ரூவாய்க்கு இருக்கிற வலிமை பெருமை நீங்க சம்பாதிக்கிற பல ஆயிரம் ரூபாய்க்கு கூட இல்ல’’ என்று முனியப்பன் சொல்ல…

முனியப்பனைக் கேள்வி கேள்வி கேட்டுக்கொண்டிருந்த இல்லத்தரசன் இல்லத்தரசியின் மீது இடி விழுந்தது போல இருந்தது.

‘‘ஏய்… என்ன அப்பிடி சொல்லிட்டு இருக்க. நாங்க என்ன அப்பிடியா வாழ்ந்திட்டு இருக்கோம். வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசு. அப்புறம் நடக்கிறதே வேற’’ என்று அந்த இல்லத்தரசன் மேலும் மேலும் பேச

‘‘ஹலோ நீங் மட்டுமல்லீங்க. ஒங்கள மாதிரி இருக்கிற எத்தனையோ பேருக்கு ஆயிரம் ரூவா ரெண்டாயிரம் ரூவாங்கிறது ஒங்களோட சாதாரண செலவாயிருக்கலாம் . ஆனா எங்கள மாதிரி இருக்கிற ஆளுகளுக்கு இது தான் முதலீடு. வாழ்க்கையோட ஆதாரம் எல்லாமே.

உழைக்கிறவன எப்பவும் சாதாரணமா ,கேவலமா நினைக்காதீங்க. உங்கள விட எங்கள மாதிரி இருக்கிற ஆளுகளுக்கு தான் சுயமரியாதை ரொம்ப அதிகமா இருக்கு. நீங்க ஆடம்பரமா செலவு செஞ்சு ஒரு நிமிசத்துக்குள்ளே ஆயிரக்கணக்கா செலவு பண்ணலாம். ஆனா நாங்க உழைச்சுச் சம்பாதிக்கிற ஒரு பைசாவுக்கு உங்க ஆடம்பரச் செலவு ஈடாகாது என்று முனியப்பன் சொல்லிவிட்டு

‘‘மாதுளம்பழம்.. மாதுளம்பழம்..’’ முனியப்பன் கூவிச்செல்லும் வார்த்தைகளில் சுயமரியாதை செழித்து நின்றது.

இரண்டு பேருக்கும் செவுளில் அறைந்தது போல இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *