செய்திகள்

மோடி கொடுப்பது போலி கியாரண்டி; காங்கிரஸ் அளிப்பது பக்கா கியாரண்டி

புதுச்சேரியில் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

புதுச்சேரி, ஏப். 16–

மோடி கொடுப்பது நோ கேரண்டி; போலி கியாரண்டிகள்தான். ஆனால், காங்கிரஸ் அளிப்பது பக்கா கியாரண்டி என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:–

பாஜக அரசு பல மாநிலங்களில் குறுக்கு வழியில் எம்எல்ஏக்களை மிரட்டி ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இதுவரை 444 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் அரசுக்கு, ஆளுநர் மூலம் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதுதான் ஜனநாயகமா? புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். ரங்கசாமியும் செயல்படவில்லை; மோடியும் செயல்படவிடவில்லை.

மோடியால் சீரழிந்த பொருளாதாரம்

யார் வேண்டுமானாலும் எந்தக் கடவுளையும் கும்பிடலாம். இந்தக் கடவுளை வணங்க வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது. பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் கடன் ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ரூ.50 லட்சம் கோடி மட்டும்தான் கடன் பெற்றோம். மோடியால், நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. அவர், தனது நண்பர்களுக்கு கடனை வாரி வழங்குகிறார். அவர்கள் வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். அவர் மக்களை ஏமாற்றி வருகிறார். மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக சோனியா, ராகுல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஓர் ஆண்டில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் தரப்படும். பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உரிமைத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி, ஆஷா, சமையல் கூட ஊழியர்களின் ஊதியங்கள் இருமடங்காக்கப்படும். மோடியின் கியாரண்டி அனைத்தும் போலி கியாரண்டி; நோ கியாரண்டி. காங்கிரஸின் கியாரண்டி அனைத்தும் பக்கா கியாரண்டி. இவ்வாறு பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *