செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது: எடப்பாடி குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.16–

தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–-

இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். மழை வெள்ள பாதிப்புக்கு, மற்றவர்கள் மீது பழி சுமத்தி திமுக அரசு தப்பிக்க பார்க்கிறது. மழை வெள்ளத்தின் போது, மக்களை தி.மு.க. அரசு வஞ்சித்தது. மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அண்ணா தி.மு.க. தான்.

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், தி.மு.க. அரசு என்ன செய்தது? விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

ஊழல் இல்லாத துறையே இல்லை, எல்லா துறையிலும் லஞ்சம். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாக 2,118 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. தி.மு.க. அறிவித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. – அண்ணா தி.மு.க. இடையேயான வாக்கு சதவீதம் 3 சதவீதம் மட்டுமே.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *