செய்திகள்

வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் 30 சதமாக உயர்வு

டெல்லி, ஆக. 26–

பொதுத் துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்த இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் குடும்ப ஓய்வூதியம் மிக மிகக் குறைவாக உள்ளது எனவும் ஒன்றிய அரசு ஊழியர்கள், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்துக்கு இணையாக உயர்த்த வேண்டும் என்றும் நீண்ட காலமாக வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

30 சதமாக உயர்வு

இதுதொடர்பாக நேற்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 30 சதவிகிதமாக அதிகரிக்க இந்திய வங்கிகளின் சங்கங்கள் தெரிவித்த திட்டத்துக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை அதிகரிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், ‘தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஊழியர்களின் பங்களிப்பை தற்போதுள்ள 10 சதவிகிதத்திலிருந்து, 14 சதவிகிதமாக உயர்த்தவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதன் மூலம், ஆயிரக்கணக்கான பொதுத் துறை வங்கி ஊழியர்களின் குடும்பங்கள் பயனடையும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *