செய்திகள்

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

சென்னை, நவ.8-–

ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலிப்பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறையின் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் (சி.ஐ.டி.) காவல்துறை தலைவர் அபாஷ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-–

கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க்கடன் அளவு ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. 2021-–2022–-ம் ஆண்டில் 14 லட்சத்து 84 ஆயிரத்து 52 விவசாயிகளுக்கு 10 ஆயிரத்து 292.02 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 8 லட்சத்து 44 ஆயிரத்து 82 விவசாயிகளுக்கு 6 ஆயிரத்து 341.89 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2021–-22) 5 லட்சத்து 87 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 565 பேருக்கு ஆயிரத்து 730.81 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 722 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 537 பேருக்கு ரூ.741.78 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் உள்ள 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 847 விவசாயிகளுக்கு ஆயிரத்து 22.57 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 3 ஆயிரத்து 376 பேருக்கு 5 சதவீத வட்டியில் ரூ.7.77 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 14 லட்சத்து 51 ஆயிரத்து 344 எண்ணிக்கையிலான நகைக்கடன்கள் ரூ.5,013.33 கோடியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 13 லட்சத்து 12 ஆயிரத்து 717 குடும்பங்கள் பலன் அடைந்துள்ளனர்.

ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 617 எண்ணிக்கையிலான மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2,755.99 கோடி தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 உறுப்பினர்கள் பலன் அடைவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவில் முதலிடம் வகித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 6 ஆயிரத்து 63 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.28 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33 ஆயிரத்து 487 கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 641 விண்ணப்பங்களும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கு 23 ஆயிரத்து 166 விண்ணப்பங்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 503 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற வருகிற 14-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *