சென்னை, ஜன. 24–
ரெயில் தண்டவாளங்களில் வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் 32 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்க தமிழக ரெயில்வே போலீசும், ரெயில்வே பாதுகாப்புப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.
இது குறித்து ரெயில்வே போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 21ம் தேதியன்று மாலை 4.30 மணியளவில் சந்திரகாசி ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி கோரமண்டல் விரைவு வண்டி வந்து கொண்டிருந்தது. கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தை தாண்டி வந்த போது அங்கு ரெயில் படிக்கட்டில் அமர்ந்தபடி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோணி சேக் என்ற நபர் தனது மொபைல் போனை பார்த்தபடி பயணம் செய்து வந்தார்.
கொருக்குப்பேட்டை பகுதியில் ரெயில் மெதுவாக வந்த திடீரென ஒரு நபர் கீழே இருந்தபடி அவரது செல்போனை தட்டி பறிக்க முயன்றார். இதில் ரோணி சேக் தடுமாறி ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் 392 (வழிப்பறி), 302 (கொலை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விஜயகுமார் (19) மற்றும் அவரது சகோதரர் விஜய் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து கொருக்குப்பேட்டை உள்ளிட்ட ரெயில் தண்டவாளப் பகுதிகளில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் மூலம் தண்டவாள ரோந்துப் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அது தொடர்பாக ரெயில்வே போலீசார் கூறுகையில், ‘‘செல்போன் பறிக்க முயன்ற நடந்த கொருக்குப் பேட்டை ரெயில் தண்டவாளங்கள் பகுதியில் 32 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து 24 மணி நேரமும் காவலர்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்டவாள ரோந்து செல்லும் காவலர்களுக்கு சுமார் 600 மீட்டர் வரை ஒளி வீசும் திறன் கொண்ட டார்ச் லைட், சம்பவ இடத்தின் அருகில் இரண்டு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் GRP & RPF மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் நல்லுறவு கூட்டம் நடத்தி மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில் பயணிகள் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் நடைபெறும் குற்ற நடவடிக்கைளை தடுக்க இருப்புப்பாதை காவல் 24×7 உதவி மைய எண் 1512 மற்றும் தொலை தொடர்பு எண் 99625 00500 தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவித்தால் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.