செய்திகள்

ரூ.18 ஆயிரம் கோடியை செலுத்திவிட்டு வெளிநாட்டுக்கு செல்லுங்கள்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Spread the love

புதுடெல்லி, ஜூலை 10

‘வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனர், நரேஷ் கோயலுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம், ‘ஜெட் ஏர்வேஸ்’. 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் சிக்கி உள்ளது. இதனால், பைலட்கள் உட்பட ஊழியர்கள் அனைவருக்கும், பல மாத சம்பளம் நிலுவையில் உள்ளது.நிதி நெருக்கடியால் விமான சேவை பாதிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 17ல், விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மே, 25ல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலும், அவரது மனைவி அனிதாவும், டெல்லியிலிருந்து துபாய் வழியாக, லண்டனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.இதையடுத்து இருவரும், டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். துபாய் செல்லும் விமானத்தில் ஏறினர். ஆனால், ‘உங்களை, மத்திய அரசு தேடப்படும் நபர்களாக அறிவித்துள்ளது. அதனால், நீங்கள், வெளிநாடு செல்ல முடியாது’ எனக் கூறி, விமானத்திலிருந்து, இருவரையும், விமான நிலைய அதிகாரிகள் இறக்கிவிட்டனர்.

மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில், நரேஷ் கோயல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

நரேஷ் கோயல் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், மனிந்தர் சிங் கூறியதாவது:

நரேஷ் கோயலுக்கு, விசாரணையி லிருந்து தப்பிக்கும் எண்ணம் இல்லை. நிதி திரட்டும் நோக்கில்தான் லண்டனுக்கு செல்ல இருந்தார். இந்த மனுவை தாக்கல் செய்யும் வரை, நரேஷ் கோயல் மீது, எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், இப்போது, மத்திய அரசின், நிதி மோசடி தடுப்புக் குழுக்களில் ஒன்றான, எஸ்.எப்.ஐ.ஓ., எனப்படும், தீவிர முறைகேடு விசாரணை அலுவலகம், திடீரென ஜூலை, 10ல் ஆஜராகும்படி, ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மனிந்தர் ஆச்சார்யா கூறியதாவது:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. அதனால், நரேஷ் கோயல், வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி சுரேஷ் கைட் கூறுகையில், ”நரேஷ் கோயலை தேடப்படும் நபர் என, அறிவித்துள்ளது பற்றி, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ”இந்த சூழ்நிலையில், நரேஷ் கோயல், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், 18 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்,” என்றார். பின்னர் விசாரணையை, ஆகஸ்ட் 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *