நாடும் நடப்பும்

ராக்கெட்டில் விவசாயம், ஆன்லைனில் வாக்குப்பதிவு

வளரும் அறிவியல் தர இருக்கும் புதுமைகள்

முன் காலத்தில் வழக்கத்தில் இருந்த சொற்றொடர், ‘மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டி போரடித்தது போல்’. அதாவது விவசாயம் சிறப்பாக நடைபெற்றால் விளை நெற்கதிரை நிலத்தில் ஒரு புறத்தில் குவித்து வைத்து விட்டு, அதன் அளவு குறைவாக இருந்தால் மாடுகளை மட்டும் பிணைத்து கட்டி பிணையல் ஓட்டி அதன் மீது நடக்க விட்டு நெல்லைப் பிரித்தெடுப்பர். ஆனால் விளைச்சல் அதிகமாக இருக்கும் நேரத்தில் யானையை கொண்டுதான் அக்காரியத்தை செய்வார்களாம்!

அது அந்த காலம். இனி மனிதனுக்கு கதிர் அறுக்கவும் நெல் மணிகளை பிரிக்கவும் இயந்திரங்கள் வந்து விட்டது.

இதனால் விவசாயிகள் அந்த வேலைசெய்யத்தேவை இல்லை! ஆகவே பிற தொழில்களில் குறிப்பாக நிலையான மாத வருவாய் பணிகளுக்கு நகரங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஆனால் விவசாயிகள் ஏன் தலைநகர் டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்?

மிச்சம் மீதி இருக்கும் விவசாயிகள், நில உரிமையாளர்கள் விவசாயத்தை தொடர லாபகரமாக இயங்க கைநிறைய காசு கிடைக்காமல் திணறுவதால் தான்.

நடைமுறையில் விவசாயத்தை நம்பி இருக்கும் இடைத்தரகர்கள் விவசாயிகளை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்!

விவசாயம் குறைந்தால் இடைத்தரகர்களுக்கு விலை அதிகரிப்பால் லாபமும் அதிகரிக்கும்! ஆக ஒரு பக்கம் விவசாயிகள் குறைந்து வருவதும் விவசாய நிலம் இயற்கை சீற்றங்களால் சேதப்பட்டு கொண்டிருப்பதும் பிற்கால சந்ததியினருக்கு அபாய செய்திகளாகவே மாறி வருகிறது.

எங்கும் எதிலும் இயந்திரமயம் என்பதை தடுக்கவே முடியாது! தேர்தலில் வாக்குப் போடும் முறையும் மின்னணு இயந்திரம் வழியாக இருப்பது இன்றும் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதற்காக பின்னோக்கி பழைய அச்சிட்ட தாள் வாக்குமுறைக்கா செல்வது?

அதைவிட மிக பாதுகாப்பான ஆன்லைன் சமாச்சாரமாக உயர்த்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும்.

இன்று எப்படி ஏடிஎம் செல்லாமலேயே இ –பரிமாற்ற முறையில் நுழைந்து விட்டோமோ, அதுபோன்றே தேர்தல் முறைகளிலும் புதுமையை கையாளத் தயாராக வேண்டும்.

நமது பண பரிவர்த்தனைக்கு இனி இ –வங்கி சேவைகளை போல் உயர் பாதுகாப்பான ஒரு முறை வரும் ரகசிய எண் அதாவது OTP போல் வாக்காளர்களுக்கு பிரத்தியேக ரகசிய எண்ணை தருவித்து, அதைப் பதிவு செய்தால் மட்டுமே வாக்கு பதிவாகும் முறை இன்றைய கணினி யுகத்தில் சாத்தியம்.

ஒருவரால் மட்டுமே உருவாக்கிட முடியும் OTP ரகசிய எண்களை போல் வாக்குப் பதிவுக்கும் ரகசிய எண் கொண்டு ஏடிஎம்களில் வங்கிகளில் அரசு இ –சேவை மையங்களில் மடிக்கணினிகளில் கையில் உள்ள நவீன செல்போன்களில் கூட அந்த வசதியைத் தர முடியும்.

பல நாடுகளில் பண்டைய வாக்குச்சீட்டு முறை தொடரத்தான் செய்கிறது. அதை சுட்டிக் காட்டி இந்தியாவும் அப்படி பின் சென்று விடலாமே என பலர் கருத ஒரே காரணம், ‘தேர்தல் தில்லுமுல்லு’ அனுபவங்கள் தான்.

நம் நாட்டில் முன்பு அரசியல் கட்சிகளின் கையாட்கள் மற்றவர்களை ஏமாற்றி மிரட்டி தங்களது சுய லாபத்திற்காக ஜனநாயகத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டு கள்ள வாக்குகள் போட்டு வந்ததைக் கண்டு தான் நாம் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கே மாறினோம்.

ஆரம்பம் முதலே மின்னணு வாக்குகளின் மீது பல்வேறு கட்சியினர்களுக்கு நம்பிக்கையை தராததால் வாக்குசீட்டு முறை மீண்டும் கொண்டுவரக் கோரிக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அச்சடிப்பு செலவு கிடையாது, ஓட்டு எண்ணிக்கையில் கால தாமதங்கள், வாக்கை எளிதில் செல்லாத வாக்காகவும் மாற்றி விட முடியும்!

ஆனால் மின்னணு வாக்கெடுப்பு சந்தேகங்களை மறந்து விட்டு பார்த்தால் இது தான் சரி என்று புரிந்து கொள்வோம்.

அதுபோல் விவசாயிகள் சிக்கல்களுக்கு இருக்கும் நல்ல மாற்று திட்டம் தானியங்கி சமாச்சாரங்கள். சுய சிந்தனை திறன் கொண்ட இயந்திர மனிதன், பெரும் தரவு (Big Data) ஆகிய நவீன யுக விஞ்ஞானத்தில் தான் இருக்கிறது.

இதுபோன்ற ஒர் அதிநவீன புரட்சி விண்வெளி விவசாயத்தில் அறிமுகமாகி வருகிறது. விண்வெளி ஆய்வு மையமான ஐ.எஸ்.எஸ்.சில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகளில் முக்கியமான ஒன்று புவியீர்ப்புஇல்லா நிலையில் விவசாயமாகும்!

அப்படி விவசாயம் செய்து பல காய்கறிகள், உணவு தானியங்கள் அறுவடை செய்துள்ளனர்.

அவற்றின் போது நான்கு புதுமையான நுண் கிருமிகள் தோன்றியுள்ளன. அவை நச்சுத் தன்மை கொண்டவை கிடையாது. மாறாக விவசாயிகளின் நண்பனாகவே கருதப்படுகிறது.

அப்படி ஒரு கிருமியை கண்டுபிடித்துள்ளார் இந்திய வம்சாவளி விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன். நாசாவில் பணியாற்றும் அவர் அந்த பாக்டீரியாவுக்கு தனது தமிழக விஞ்ஞானி நண்பர் அஜ்மல் கானின் பெயருக்கு புகழ் சேர்க்கும் விதமாக அஜ்மல் பாக்டீரியா என்று பெயர் வைத்துள்ளார்.

இதுபோன்ற பாக்டீரியாவின் உதவியுடன் ராக்கெட் பயணத்தின் போது, நிலவில் ஆய்வு செய்யும் போதும் பிறகு கண்டங்கள் நோக்கி படை எடுத்துச் செல்லும் காலத்திலும் நமது பாரம்பரிய உணவுக்காக விவசாயம் செய்து அறுவடை பெற முடியும்!

மாடு, யானை காலம் மாறி ராக்கெட்டிலும் விவசாய விஞ்ஞானம் களமிறங்கி விட்டது!

தமிழக விஞ்ஞானியின் பெயர் சூட்டி பெருமைப்படுத்திய நாசா:

நிலவில் விவசாயம் செய்ய உதவும் பாக்டீரியாவை கண்டுபிடித்த தமிழக விஞ்ஞானி ‘நட்புன்னா என்னனு தெரியுமா?’ என்று கேட்டால், அமெரிக்காவின் நாசா விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தமிழகத்தில் வாழும் தன் ஆத்மார்த்த நண்பன் விஞ்ஞானி சயீத் அஜ்மல் கான் பெயரைச் சொல்கிறார். சும்மா வாய் வார்த்தைக்கு அல்ல தன்னுடைய உயிரியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கே நண்பனின் பெயரைச் சூட்டி நட்பை நிலைநாட்டி இருக்கிறார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிதாக நான்கு பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘மித்திலோ பாக்டீரியாசியே’ என்ற வகை பாக்டீரியாவுக்கு ‘மித்திலோ பாக்டீரியம் அஜ்மலீ’ என்ற பெயரை வழங்கியவர், நாசாவில் 25 ஆண்டுகளாக உயிரியல் விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் கஸ்தூரி வெங்கடேஸ்வரன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

விண்வெளி நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பாக்டீரியாவுக்கு பேராசிரியர் சயீத் அஜ்மல் கானின் பெயரை சூட்டியது ஏன்?

புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் போது அவற்றுக்கு அதிசிறந்த ஆளுமைகளின் பெயரைச் சூட்டுவது வழக்கம். அந்த வகையில் இதற்கு முன்னால் எங்களுடைய குழு கண்டுபிடித்த பாக்டீரியாக்களில் ஒன்றுக்கு டாக்டர் அப்துல் கலாமின் பெயரை சூட்டினோம். என்னைப் பொருத்தவரை என்னுடைய நெருங்கிய சினேகிதன் சயீத் அஜ்மல் கானும் அப்துல்கலாமுக்கு இணையான பேராளுமையே. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பலவற்றை அவர் செய்திருக்கிறார். இந்தியாவும் தமிழகமும் கொண்டாடத் தவறிய அறிவியல் கதாநாயகன் அவர்.

நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும் துறை ஆசிரியராகவும் பணி புரிந்தபோது, அஜ்மலின் ஆற்றலையும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் நாள்தோறும் 18 மணி நேரம் ஆராய்ச்சியில் ஈடுபடும் பாங்கையும் கண்டு வியந்திருக்கிறேன். 50 ஆண்டுகளாக கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் அவரை கவுரவப் படுத்தவே நான் கண்டுபிடித்த பாக்டீரியாவுக்கு ‘மித்திலோ பாக்டீரியம் அஜ்மலீ’ என்ற பெயரைச் சூட்டினேன்.

தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி நாசாவில் பணியில் சேர்ந்தீர்கள்? அதுவும் கடல்வாழ் உயிரியல் விஞ்ஞானிக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு?

கடலுக்குள் 3,000 மீட்டர் ஆழத்துக்கு நீந்திச் சென்று கடல்மடியில் ஆராய்ச்சி செய்த முதல்வன் தமிழன் நான். என்னுடைய வாழ்க்கையின் தொடக்கம் மிக எளிமையானது. ஈரோடு மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பில் எப்போதுமே முதலிடம் தான். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றேன்.

பிறகு ஜப்பான் ஹிரோஷிமா நகரில் வேளாண்மை படிப்பிலும் முனைவர் பட்டம் பெற்றேன். கடல்வாழ் உயிரினங்கள் குறித்து பல கண்டங்களுக்கு கடல் மார்க்கமாகவே பயணித்து ஆராய்ச்சிகள் செய்தேன். அதிதீவிரமான தட்பவெட்பச் சூழலிலும் நுண்ணுயிர்கள் எப்படி உயிர் பிழைக்கின்றன என்பதை முன்னிறுத்தி ஆய்வுகள் செய்து வந்தேன். ஒரு கட்டத்தில், ஆழ்கடலில் இருந்து விண்வெளிக்கு என்னுடைய ஆராய்ச்சியை திசை திருப்பும் பேரார்வம் உண்டானது. அந்த உந்துதல்தான் நாசாவின் ‘ஜெட் ப்ரொபல்ஷன்’ ஆய்வுக் கூடத்தில் எனக்கு பணி வாய்ப்பை பெற்றுத் தந்தது.

நாசாவில் பல உயிரியல் விஞ்ஞானிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பூமியில் மட்டும் தான் உயிர் வாழ முடியுமா, வேறு கோள்களில் ஏன் முடியாது? போன்ற உயிரியல் சார்ந்த கேள்விகளுக்கான விடை தேடும் ஆராய்ச்சிகள் நாசாவில் நடைபெற்று வருகின்றன. இப்போது நாங்கள் கண்டெடுத்திருக்கும் பாக்டீரியாக்களும் அந்த தேடலுக்குத் தான் உதவக்கூடியவை.

சந்திர மண்டலத்திலும் செவ்வாய் கோளிலும் பயிரிட மண், நீர், காற்று, சூரியஒளி போல நுண்ணுயிர்களும் அத்தியாவசியம். பூமியில் இருந்து மனிதர்கள் வேற்று கிரகத்துக்குச் செல்ல பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கூடவே பூமியில் இருந்து மண்ணை அள்ளிக்கொண்டு போய் விண்ணில் விவசாயம் செய்ய முடியாதே! சந்திரனிலும் செவ்வாயிலும் உள்ள மண்ணில் பயிரிட, தாவரங்களின் வேரை வளப்படுத்தும் பாக்டீரியாக்கள் வாழ்வதை இப்போது கண்டுபித்துவிட்டோம். முள்ளங்கி, கீரை வகைகளை சந்திரனில் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இந்தத் துறையில் 1971-ல் துணை பேராசிரியராக பணியில் சேர்ந்து 2009–-ல் பேராசிரியராக ஓய்வு பெற்றவர் முனைவர் சயீத் அஜ்மல் கான். பிறகு, தலைசிறந்த கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் ‘எமரிட்டஸ்’ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டு இவருடைய கல்விச் சேவையை தொடரும்படி பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து கவுரவப் பேராசிரியராக இன்று வரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நாசா தனக்கு வழங்கியிருக்கும் அங்கீகாரம் குறித்து முனைவர் சயீத் அஜ்மல் கானிடம் பேசியபோது, “எல்லா புகழும் என் நண்பரையே சேரும். என் மீது தனிப்பட்ட முறையிலும் என் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மீதும் அவர் மிகுந்த மரியாதை கொண்டவர். இந்த அங்கீகாரம் எனக்கு எதிர்பாராமல் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று சாந்தமாக பேசி தன்னுடைய நண்பரின் வாக்கை மெய்ப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *