சினிமா

ரமேஷின் துணிச்சலில் இயக்குனர் அசோக் நரசிம்மன் அறிமுகம்

மூன்றே மூன்று நடிகர்களை மட்டுமே வைத்துக் கொண்டு 75 நிமிடம் ஓடும் ‘இரக்க மனம்’, அரக்க குணம்’ என்னும் ஒரு குறும்படத்தை ரமேஷ் ஜெயசேகரன் என்பவரின் தயாரிப்பில் இயக்கியிருக்கிறார் இளைஞர் அசோக் நரசிம்மன். வெள்ளித் திரையில் வலது கால் எடுத்து நுழைவதற்கு–அதுவும் முழு நீள (15 ரீல்) பொழுது போக்குப்படம் தரும் கமர்ஷியல் சினிமாவில் அடி எடுப்பதற்கான அடையாள சீட்டாக இரக்க மனத்தை காட்டியிருக்கிறார். இருவரும் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரசாத் ஸ்டூடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட படத்தைப் பார்த்த டைரக்டர்கள் கே.பாக்யராஜ், அரவிந்த்ராஜ், ரவிச்சந்திரன், மகாபிரபு, வெங்கடேஷ், தமிழ்ப்பட அதிபர்கள் கில்டின் தலைவரும், ஸ்டண்ட் டைரக்டர்– நடிகருமான ஜாகுவார் தங்கம் ஆகியோர் அசோக் நரசிம்மனின் குறும்படம் பற்றி மனம் திறந்து பாராட்டினார்கள்.

தயாரிப்பு செலவைக் குறைத்து– நடிகர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து காட்டி– ஜனரஞ்சகமாக படம் தருவதில் தான் அறிமுக இயக்குனரின் சாமர்த்தியம் இருக்கிறது. அதன்படி பார்த்தால் அசோக் நரசிம்மன் ‘ப்ரொட்யூசர்ஸ் டைரக்டர்’ (தயாரிப்பாளர்களின் இயக்குனர்) என்று வாழ்த்துரைத்துப் பாராட்டினர்.

* அறிமுகம் என்றாலும் அசோக்கின் கதையைக் கேட்டு படம் எப்படி வருமோ என்று நாளும் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, பொறுமை காத்திருக்கும், ரமேஷ் ஜெயசேகரின் துணிச்சலையும் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் பாராட்டினர்.

பிரான்சிஸ்– கதாநாயகன், சுமா– நாயகி. கிருஷ்ணகுமார் வில்லன், பாபு செல்வம் வில்லனின் நண்பன்.

காமுகனாக மாறும் காதலன்– கிருஷ்ணகுமார்; அவனின் கொலை வெறியிலிருந்து மனைவியை காப்பாற்றும் ரட்சகன் பிரான்சிஸ்; இருவருக்கும் இடையில் இருதலைக் கொள்ளி எறும்பாய் சிக்கித் தவிக்கும் சுமா. மூவரைச் சுற்றி வரும் கதை.

காதலியை மிரட்டி மிரட்டி பணம் பறிக்கும் காமுகனுக்கு இறுதியில் முடிவு என்ன? விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் காட்சிகளை அசோக் நரசிம்மன். பிரான்சிஸ், சுமா குறை சொல்ல முடியாத நடிப்பு.

எதிர்மறை கதாபாத்திரம் எப்போதுமே எளிதில் மனசைத் தொடும் என்பது இயற்கை. அந்நிலையில் வில்லன் கிருஷ்ணகுமார் –பிள்ளைப் பூச்சி இல்லை, கொட்டும் தேள். அந்த முகமும்… அவரின் பயமுறுத்தும் கட்டைக் குரலும்… அவரை நினைவில் நிறுத்தும். எதிர்காலம் உண்டு, இந்த சினிமாவில்.

கவுதம் கணேஷ்– சஞ்சய் ஒளிப்பதிவாளர், ஜித்தேந்திர காளிஷ்வர்– இசை; ஜேம்ஸ்–ஒலிப்பதிவு. கதை ஓட்டத்துக்கு ஏற்ப ஈடு கொடுக்கும் பின்னணி இசை. 75 நிமிட குறும்படத்திலேயே– உட்கார வைத்திருப்பவர்களுக்கு, முழு நீள சினிமாவில் ரசிகர்களை உட்கார வைக்கும்– சாமர்த்தியம் வராமலா போய்விடும்? ‘இரக்க மனம்’, அரக்க குணம்’ இளைஞர்கள் குழுவுக்கு வெள்ளித் திரையில் கதவுகள் திறக்கும், உரக்கக் கூவலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *