சிறுகதை

ரகசியம் |ஆவடி ரமேஷ்குமார்

அந்த முதியோர் இல்லத்திற்கு மாதம் ஒரு முறை வந்து உணவு, திண்பண்டம், துணிமணிகள் கொடுத்து உபசரிக்கும் சுரேஷ் இன்று வந்திருக்கிறான்.

ஹாலில் எல்லோரும் ஒன்றாக கூடியிருக்க, தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் கௌசல்யாவை காணவில்லை சத்தியவதிக்கு.

இது சுரேஷ் வரும் போதெல்லாம் நடக்கும் நிகழ்ச்சி தான்.

சுரேஷ் புறப்பட்டுப்போனதும் தன் அறைக்கு சென்றாள் சத்தியவதி.அங்கே மௌனமாக அழுதபடி கட்டிலில் அமரந்திருந்தாள் கௌசல்யா.

“என்ன கௌசி..ஏன் அழற?”

“ஒண்ணுமில்லக்கா” என்றபடி கண்களை துடைத்துக் கொண்டாள் கௌசல்யா.

“நானும் ஆறேழு மாசமா கவனிச்சிட்டுத்தான் வரேன்.

இந்த சுரேஷ் பையன் இங்க வரும் போதெல்லாம் நீ மட்டும் ‘ஹால்ல’ ஆப்சென்ட் ஆகிடறயே..ஏன்? மத்தவங்க வந்து எந்த உதவிகள் செய்தாலும் ஏத்துக்கிற நீ சுரேஷ் செய்யற உதவிகளை ஏத்துக்க விரும்பாம ஆப்சென்ட் ஆகிடறியே…இந்த சுரேஷ் என்ன உனக்கு தெரிஞ்ச பையனா?”

” அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா… வேற விசயம் ஏதாவது இருந்தா பேசுங்கக்கா”

“இல்ல …இல்ல.. இதில் ஏதோ ஒரு ரகசியம் இருக்கு. என்கிட்ட சொல்ல தயங்குற. அப்படித்தானே கௌசி?”

பரிதாபமாய் சத்தியவதியை ஏறிட்டாள் கௌசல்யா.

“சில உண்மைகளை சொன்னா நீங்க அதிர்ச்சியாகிடுவீங்க அக்கா. விடுங்க.”

“என்னது ரொம்ப பில்டப்பெல்லாம் குடுக்கிற.. அக்கானு ஆசையா கூப்பிடற நீ இந்த அக்காவை சொந்த அக்கா மாதிரி நினைச்சு பழக மாட்டேங்கிறியே கௌசி! சரி சொல்ல விருப்பமில்லைனா…?

நான் தொந்தரவு பண்ணல”

“சரி சொல்றன்க்கா. இந்த சுரேஷ் வேற யாருமில்லை; நான் பெத்த பையன் தான்!”

“என்னது!?”

” அதான் அதிர்ச்சியடைவீங்கனு சொன்னேனேக்கா”

” கௌசி…உனக்கு ஒரே பையன்னு என்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்க. அவன் அகிலேஷ் .அவன் தான் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு உன்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு போனான். அவனை நான் பார்த்திருக்கேன். இந்த சுரேஷ் பையனைப் பத்தி நீ ஏன் முன்னயே என்கிட்ட சொல்லல?”

“அய்யோ.. என்னை கொல்லாதீங்கக்கா. இவன் என் முதல் கணவர் வெங்கட்டுக்கு பிறந்தவன். ரெண்டு மாச கைக்குழந்தையா சுரேஷ் இருந்தப்ப ஒரு தாய் செய்யக்கூடாத செயலை செய்தவள் நான். அதுக்கு தண்டணையா ரெண்டாவது கணவருக்கு பிறந்த அகிலேஷ் என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போய்ட்டான்!”

கௌசல்யாவிற்கு இரண்டு கணவர்கள் என்ற விஷயம் கேட்டு உண்மையிலேயே அதிர்ந்து தான் போனாள் சத்தியவதி.

கௌசல்யாவே தொடர்ந்தாள்.

“வெங்கட்டும் நானும் ஒண்ணா காலேஜ்ல படிக்கும் போது காதலிச்சோம். கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க கல்யாணத்தை எங்கப்பா அம்மா ஏத்துக்கலை. காரணம் எங்கப்பா ஒரு கோடீஸ்வரர்!

வெங்கட் கூடவே வாழ்ந்திடறதுனு முடிவு பண்ணி அவர் வீட்ல இருந்தேன். சுரேஷ் கைக்குழந்தையா இருந்த போது எங்கப்பா என்னை ஒரு கோயில்ல பார்த்து,’ குழந்தையை வெங்கட்கிட்ட கொடுத்துட்டு நீ மட்டும் நம்ம வீட்டுக்கு வந்திடு; உன்னை ஏத்துக்க ஒரு கோடீஸ்வர மாப்பிள்ளை தயாரா இருக்கார்; நீ வரலைனா சொத்தெல்லாத்தையும் ஏதாவது ஒரு கோயிலுக்கு எழுதி வச்சிடுவேன்’ னு சொன்னார்.

‘நான் மாட்டேன்’ னு சொன்னேன். அப்புறம் வெங்கட்டுக்கு நல்ல வேலை கிடைக்கலை. மாமனார் சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிட்டிருந்தேன். அவமானமா இருந்தது. மாமியார் என்னை ‘ராசியில்லாதவள்; வனத்தழிச்ச குரங்கு; அவங்கப்பன் வீட்டுக்கு தொரத்தி விடுடா’ னு சதா திட்டிட்டிருந்தாங்க. வறுமை வாழ்க்கை எனக்கு பிடிக்கலை.

‘தப்பு பண்ணிட்டமே’ னு ரொம்ப பீல் பண்ணினேன். எங்கப்பா மறுபடியும் ஒரு ஆள் மூலமாக தூது விட்டாரு. எனக்கு தற்கொலை பண்ணிக்க தைரியம் இல்லை. நல்லா வாழனும்னு ஆசை.

பேசாம ஒரு கடிதம் எழுதிவச்சிட்டு எங்கப்பாகிட்ட சரண் அடைஞ்சுட்டேன். ரெண்டு மாசமாகியும் வெங்கட்டும் என்னை தேடி வரவில்லை. எங்கப்பா சொன்ன அந்த கோடீஸ்வரனுக்கு கழுத்தை நீட்டிட்டேன். அகிலேஷை பெற்றெடுத்தேன்.

அவனுக்கு கல்யாணம் நடந்து முடிந்த போது எங்கப்பா, அம்மா, ரெண்டாவது கணவர்னு வரிசையா ஒவ்வொருத்தரா இறந்து போனாங்க. சொத்து வெறி பிடிச்ச அகிலேஷ் அவனோட புதுப்பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு நான் இடைஞ்சலா இருக்கேனு என்னை இங்கே கொண்டு வந்து தள்ளிட்டுப் போய்ட்டான்.

வெங்கட் வேற கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தைக்கு தகப்பன் ஆனாரு. வந்தவள் சுரேஷை அம்போனு விட்டுட்டாள். அதான் சுரேஷ் தாய்ப்பாசத்துக்கு ஏங்கியிருக்கிறான். அந்த ஏக்கத்தை இப்படி முதியோர் இல்லத்துக்கு வந்து தாய் ஸ்தானத்துல இருக்கிறவங்களுக்கு உதவிகள் செய்து திருப்தியடைகிறான்.

என் தூரத்து அத்தை ஒருத்தர்

ஒரு நாள் இந்த ஆஸ்ரமத்துக்கு வந்திருந்தாங்க. அவங்க தான்

சுரேஷோட போட்டோவை காண்பிச்சு சில விளக்கங்கள் எல்லாம் சொல்லிட்டுப் போனாங்க.

அவனை நேர்ல பார்த்து ,’நான்தான்டா உங்கம்மா’ னு எப்படி சொல்வேன்? அந்த தைரியம் எனக்கில்லக்கா. அப்புறம் நான் இங்கெப்படி வந்தேன்கிற கதையை சொல்லவேண்டி வருமே… அதுக்கு பயந்து தான் அவன் வரும் போதெல்லாம் ஓடி ஒளிஞ்சிக்கிறேன்.

இப்ப சொல்லுங்கக்கா… நான் ஓடி ஒளியறது சரியா தப்பா? அகிலேஷ் கொடுத்த தண்டணையை சுரேஷ்க்கு நான் செய்த கொடுமைக்காக அனுபவிக்க வேண்டாமா? சுரேஷ்க்கு என்னை தெரிஞ்சா

சும்மா விட்ருவானா?

அப்புறம் இங்கிருக்கிறவங்களுக்கு அவன் தொடர்ந்து உதவிகள் செய்ய மனசு வருமா?”

அமைதியாய் கேட்ட சத்தியவதி சில வினாடிகள் யோசித்துவிட்டு, “நீ செய்யறது சரிதான் கௌசி” என்றாள்.

பின்பு அவளை நெருங்கி ஒரு உண்மையான சகோதரியின் ஸ்தானத்திலிருந்து அவளின் தலையை தடவிக்கொடுத்து விட்டு மனதிற்குள் ரகசியமாய் ஒரு திட்டம் போட்டாள்.

அது…

அடுத்த முறை சுரேஷ் இங்கு வந்தால், கௌசல்யாவுக்கு தெரியாமல் அவனிடம் பக்குவமாக சூழ்நிலைகளை விளக்கி,’ கௌசல்யாதான் உன்னை பெற்ற தாய்; அவளை மன்னித்து ஏற்றுக்கொள்’ என்று கூறிவிடவேண்டும்.

நிச்சயம் அவன் தன் தாயை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை சத்தியவதிக்கு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *