செய்திகள்

மும்பையில் கண்டறியப்பட்டது ‘எக்ஸ்–இ’ வகை வைரஸ் இல்லை : மத்திய அரசு தகவல்

மும்பை, ஏப்.7–

மும்பையில் கண்டறியப்பட்டது ‘எக்ஸ்–இ’ வகை வைரஸ் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்டா, ஒமிக்ரான் என பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது.

தற்போதும் உலகின் பல பகுதிகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த ஒமிக்ரான் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய வகை உருமாற்றத்திற்கு ’எக்ஸ்–இ’ வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த ‘எக்ஸ்–இ’ வைரஸ் முதன்முதலில் கடந்த ஜனவரி 19–ந்தேதி இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எக்ஸ்இ உருமாறிய வைரஸ் ஒமிக்ரான் வகையிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடியது. ஒமிக்ரான் வைரசில் உள்ள பிற திரிபை விட ‘எக்ஸ் இ’ வகை 10 சதவீதம் அதிக வேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் ’எக்ஸ் இ’ வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மும்பை வந்த ஆடை அலங்கார பெண் கலைஞருக்கு மார்ச் 2–ந்தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ‘எக்ஸ் இ’ வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது.

இந்நிலையில் மும்பையில் கண்டறியப்பட்டது ‘எக்ஸ் இ’ வகை வைரஸ் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானின் உருமாற்றமடைந்த ‘எக்ஸ் இ’ வகை கொரோனா பரவில்லை. தற்போது உள்ள ஆதாரங்கள் மும்பையில் உறுதி செய்யப்பட்டது ‘எக்ஸ் இ’ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.