செய்திகள் நாடும் நடப்பும்

மாணவர்களின் ஆரோக்கியம்!


தலையங்கம்


நாளை தமிழக அரசு அனைத்து பள்ளி வகுப்புகளுக்கும் கல்லூரி வகுப்புகளுக்கும் மாணவர்கள் மீண்டும் நேரில் வருவது பற்றிய முடிவை அறிவித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவருக்கு தடுப்பூசி தருவது பற்றி உலக சுகாதார அமைப்பு எந்த கட்டளையையும் இதுவரை பிறப்பிக்காததால் எல்லா நாடுகளுமே தயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

மூன்றாம் அலை என கொரோனா தொற்று பரவல் வந்தால் சிறுவர்கள் தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்று நாடெங்கும் அச்சம் பரவி இருக்க காரணம் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பிறகு சிறுவர்கள் பெரிய குழுமமாக ஓடியாடி விளையாட துவங்குவார்கள், அப்போது தொற்று பரவல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

அப்படி என்றால் பள்ளிகள் திறக்கப்பட கூடாதா? அது நடைமுறையில் சாத்தியமா? சமுதாய வளர்ச்சியில் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? என்பதை யோசிப்பவர்கள், வருவது வரட்டும், கல்விக் கூடங்களை திறந்து விடலாம் என்று கூறுகிறார்கள்.

நாளை முதல்வர் ஸ்டாலின் பள்ளி, கல்லூரிகளை முழுமையாக திறக்கும் முன், சிறுவர்கள் அருகாமையில் இருக்கக்கூடிய பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் நல்லது.

ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், நுழைவாயில் காவலாளிகள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார்களா? அவர்களை முன்களப்பணியாளர்கள் என்று அறிவித்து தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொள்ள உத்தரவிடவேண்டும்.

சிறுவர்கள் வருவது பேருந்துகளில் என்பதால் வாகன ஓட்டிகள், உதவியாளர்களும் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.

சிறுவர்கள் இருக்கும் வீட்டில் உள்ளவர்களில் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் எல்லோரும் போட்டுக் கொண்டு இருப்பதும் அவசியமாகிறது. அதை உறுதி செய்ய மாணவர்கள் எடுத்த மார்க் விபரங்களை தரும் ரிப்போர்ட் கார்டுடன் இணைப்பாக குடும்பத்து உறுப்பினர்களின் தகவலையும் இணைக்கச் சொல்லி அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

தற்போது தினமும் ஒரு கோடி பேருக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படுகிறது என்று பிரதமர் மோடிசமீபத்தில் கூறியுள்ளார். அதன்படி அடுத்த மூன்று மாதங்களில் நாட்டில் அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக உயர்ந்து விடுவோம்.

மாணவர்களின் தொடர்புடைய பெருவாரியானவர்களை தடுப்பூசி பெற வைத்துவிட்டால் மூன்றாம் அலை வராது என்று நம்பலாம்.

அது தவிர கொரோனா பெருந்தொற்று என்பது சுவாசப்பை அதாவது நுரையீரல் சம்பந்தப்பட்டது அல்லவா? அந்த நுரையீரலை பலப்படுத்தும் உடற்பயிற்சிகளை தினமும் மாணவர்களைச் செய்யச் சொல்லி வலுவூட்டுவதாலும் இந்த தொற்றின் சங்கிலித் தொடர்பை துண்டித்து விட முடியும்!

ஆகவே கல்விக் கூடங்களில் உடற்பயிற்சி, யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்வதை கட்டாயமாக்கினாலும் நல்லதுதான்.

சத்துணவு தருவது போல் நுரையீரலுக்கு வலுவூட்டும் கபசுர குடிநீர், ஆர்சனம் மாத்திரைகள் போன்று ஆயூஷ் அமைச்சகம் சுட்டிக்காட்டும் மருந்து மாத்திரைகளை கல்வி கூடங்களில் தர வைக்கவும் உத்தரவிட்டால் நல்லது!

சத்து மாத்திரைகள், நுரையீரல் உறுதிபடுத்தும் மாத்திரைகள் எல்லாம் வேறு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றை சில வாரங்களுக்கு மட்டும் என்று அறிவித்து இலவசமாகவோ, மிக குறைந்த விலையிலோ தர முன்வரவேண்டும்.

மாணவர்கள் நம் நாட்டின் எதிர்காலம்; நம் நாட்டின் மிகப்பெரிய சொத்து என்பதால் அவர்களுக்கு படிப்பு மிக அவசியத் தேவை. அதைவிட அவர்களின் உடல் ஆரோக்கியமும் மிகச்சிறந்த மனநலப் பாதுகாப்பும் மிகமிக அவசியம் . அவற்றைக் கொடுத்து மாணவர்களுக்கு அரணாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *