வர்த்தகம்

மலேசியாவுக்கு மின்சார பேருந்து விற்பனை திட்டம்: பேச்சுவார்த்தை குழுவில் பிரபல தொழிலதிபர் அமிர்தம் ரெஜி நியமனம்

மலேசியாவுக்கு மின்சார பேருந்து விற்பனை திட்டம்:

பேச்சுவார்த்தை குழுவில் பிரபல தொழிலதிபர் அமிர்தம் ரெஜி நியமனம்

ஒலெக்ட்ரா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோவை, செப். 13

ஐதராபாத்தை சேர்ந்த மின்சார பேருந்து தயாரிப்பு நிறுவனமான ஒலெக்ட்ரா, மலேசியா நாட்டிற்கு மின்சார பேருந்து விற்பனை திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை குழுவில் தொழிலதிபர் அமிர்தம் ரெஜியை முக்கிய தூதுவராக நியமனம் செய்து உள்ளது.

உலகநாடுகள் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை தவிர்க்கும் வகையில் நச்சு புகையற்ற வாகனங்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. இது விஷயத்தில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களின் உற்பத்தி -பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் சீரிய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

உலக நாடுகள் ஆச்சரியம்

இன்னும் 10 ஆண்டுக்குள் (2030) இந்தியாவை 100 சதவீதம் மின்சார கார்களை கொண்ட நாடாக மாற்றுவதற்கு முயற்சித்து வருவதாக கூறி நாட்டின் வாகன உற்பத்தித் துறையையும், உலக நாடுகளையும் 2017ம் ஆண்டிலேயே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு மின்சார வாகனத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. மத்திய அரசு சார்பிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், தனது அமெரிக்கப் பயணத்தின்போது, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து முதற்கட்டமாக 100 மின்சார ஆட்டோக்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் மீதான ஈர்ப்பும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டத்தோ குமார் முனியாண்டி செந்தில்குமார்

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் மலேசிய அரசும் மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு, மின்சார பேருந்து தயாரிப்பு நிறுவனமான ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒலெக்டரா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒலெக்ட்ரா நிறுவனம், பிரபல தொழிலதிபரும் அம்ர்தம் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அமிர்தம் ரெஜி மற்றும் மலேசிய தொழிலதிபர் டத்தோ குமார் முனியாண்டி, கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமார் ஆகிய மூன்று பேரையும், மலேசிய அரசுடனான பேச்சுவார்த்தை குழுவில் முக்கிய தூதவர்களாக நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பான சான்றிதழ்களையும், மலேசிய பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஒலெக்ட்ரா நிறுவனம் முறைப்படி அனுப்பி வைத்து உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

ஒலெக்ட்ரா நிறுவனத்தால் நான்கு விதமான பேருந்துகள் கட்டமைக்கப்படுகிறது. இதில் முன் பின் ஏர் சஸ்பென்சன், டிஸ்க் பிரேக், ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீட்டர் தூர பயணம், மிக விரைவான சார்ஜிங், சிசிடிவி கேமிரா போன்ற சிறப்பு அம்சங்கள் இருக்கும் என அமிர்தம் ரெஜி கூறினார்.

மின்சார பேருந்து நடந்து முடிந்த 2020 ஆட்டோ வர்த்தக தொழிற்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த தொழிற்காட்சியை மத்திய அமைச்சர் நிதின்கட்காரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மின்சார வாகனத்துக்கு பரிந்துரை

அமிர்தம் ரெஜி மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீசியஸ் போன்ற நாடுகளில் தொழில் ரீதியாகவும் நல்ல நட்புறவையும் கொண்டுள்ளார். அதன் காரணமாக பல நாடுகளின் மின்சார வாகனத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். ஒலெக்ட்ரா நிறுவனம் இந்தியாவில் பல மாநிலங்களில் 270க்கும் மேற்பட்ட பேருந்துகளை விற்பனை செய்துள்ளது.

கேரள மாநில தொழிலதிபரான அமிர்தம் ரெஜி, மலேசியா நாட்டின் பாமாயில் இறக்குமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *