சிறுகதை

மனிதர்கள் | காசாங்காடு வீ . காசிநாதன்

அருகில் இருக்கும் சாலையில் கார்கள் ஒருவழி மார்க்கமாக அதிக சத்தமின்றி விரைகிறது.

காலை பத்து மணி.

அவருக்கு 23 லிருந்து 25 வயதிற்குள் இருக்கும்.

அந்த சந்தில் அமர்ந்துள்ளார். முகம் மறைக்கப்பட்டு உடலைப் போர்வையால் போர்த்திக் கொண்டிருக்கின்றார்.

திகில் படக்காட்சி மாதிரி இருந்தாலும் பரிதாபத்தை நினைவூட்டுகிறது. கீழே தொப்பி ஒன்று மேற்புறம் தெரியும்படி இருக்கின்றது.

அதில் சில சில்லறைக் காசுகளும் ஒருசில டாலர் நோட்டுக்களும் கிடக்கின்றது.

அந்த வழிப்பாதையில் ஆட்கள் வேகமாகவும் மெதுவாகவும் நடந்தும் கடந்தும் செல்கின்றனர்.

யாரும் அவரை கூர்ந்து கவனிக்கவோ அவரைப்பற்றிச் சிந்திக்கவோ இல்லை.

அவரவர் சிந்தனையில் செல்கின்றனர். ஒருசிலர் கவனித்தாலும் பார்க்காதது போல் சென்றுவிடுகின்றனர்.

பெண்களில் சிலரும் சில ஆண்களும் அருகில் வந்தபின் கவனித்து ஏதோ பிரச்சனை. பாவம் என எண்ணி கையில் கிடைக்கும் காசுகளை தொப்பியில் போட்டுவிட்டு வேகமாகக் கடந்து செல்கின்றனர்.

இளைஞர் ஒருவர் பர்சை எடுத்து அதில் இருக்கும் குறைந்த மதிப்புடைய டாலர் நோட்டை எடுத்து கையால் நெருடிவிட்டுத் தொப்பியில் போடுகின்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நேர்த்தியான ஆடை அணிந்த நடுத்தர வயதுடைய ஒருவர் கைத்தொலைபேசியில் பேசியபடி அந்த இளைஞன் அமர்ந்துள்ள இடத்திற்கு வருகிறார்.

கைத்தொலைபேசியில் பேசியபடியே இங்கும் அங்கும் நடந்து கொண்டும் இவரைப் பார்த்தபடியே பேசிக்கொண்டும் இருக்கிறார்.

அடைபட்ட புலிக் கூண்டில் நடப்பதுபோல் இருந்தது. அமர்ந்திருப்பவர் இவரைப் பார்க்கவில்லை.

பேசுவதைக் கவனிக்கிறார். அதிலிருந்து அவர் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளவில்லை என்பது உறுதியாகின்றது.

அந்த நபர் தொடர்ந்து பேசியபடியே சிறிது நேரத்திற்குப்பின் மருத்துவமனையை நோக்கி நகர்கிறார்.

அந்த இடம் முக்கியமான சாலையிலிருந்து பிரபலமான மருத்துவனையை நோக்கிச் செல்லும் பாதையில் இருக்கிறது.

இந்த இடத்தை தேர்வு செய்ய முக்கிய இது காரணம் பிரதான சாலையிலிருந்து ஒதுங்கிய பகுதி.

மருத்துவமனை செல்பவர்கள் பெரும்பாலும் வசதியானவர்கள். ஒருசிலர் இரக்க குணமுடையோர்.

எனவேதான் இப்பகுதியைத் தனது தொழிலுக்கு சரியான இடமென தேர்வு செய்தார். காவல்துறையின் கண்காணிப்பும் குறைவு.

கடந்த சில வாரங்களாக நிறைய இடங்களில் வேலைக்கு முயற்சித்தும் ஒன்றும் கிடைத்தபாடில்லை.

இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. தண்ணீர் மட்டும்தான் பொது இடங்களில் பசியாற்றியது.

தலை மொட்டையடித்த பின் இப்போதுதான் முடி வளர்ந்து கொண்டுள்ளது. இதில் விருப்பமில்லை.

இருந்தும் வேறுவழி தெரியவில்லை.

ஆரம்பத்தில் மிகவும் கேவலமாகத் தெரிந்த இந்தச் செயல் நாளடைவில் பழகிவிட்டது.

மும்பையின் தாராவி பகுதியை முதலில் பார்ப்பவர்களுக்கு அருவருப்பாகத்தான் இருக்கும். தொடர்ந்து அங்கு சென்றால் பழகிவிடும்.

அது போலவே இந்த இளைஞனுக்கு பிச்சை எடுப்பது பழகிவிட்டது.

குறைந்தது இரண்டு மணி நேரத்தில் அவருக்கு 15 டாலர் அளவில் கிடத்துவிடும். பிறகு எழுந்து சென்றுவிடுவார்.

சில நேரங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் அந்த இடத்தில் அமர்வார்.

இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை எப்போதும் போல் தொப்பியுடன் அமர்ந்து தனது தொழிலை ஆரம்பித்து முகத்தை மூடியபடி அமர்ந்துள்ளார்.

இரண்டு காவல் அதிகாரிகள் அருகில் வந்து போர்வையை எடுத்து பார்க்கின்றனர்.

எழுந்து நிற்கின்றார். ஓடமுயற்சிக்கவில்லை.

அவரது அடையாள அட்டையைக் கேட்கின்றனர். எடுத்துக் கொடுக்கின்றார் சிங்கைவாசி.

அவர்கள் கண்காணிப்புப் பிரிவை தொடர்புகொண்டு விசாரிக்கின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் குற்றப்பிரிவில் தண்டனை பெற்று விடுதலையானவர் என்று தெரிய வருகிறது.

எதுவும் சொல்லவில்லை; கைதும் செய்யவில்லை; சென்றுவிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *