சிறுகதை

பொதுநலன் கருதி – ராஜா செல்லமுத்து

சுயநலத்தைத் துறந்து தன்னை பொது வாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொள்ளும் நபர்கள், மக்களுக்காகவே உழைக்க வேண்டும் .மக்களுக்காகவே சேவை செய்ய வேண்டும். மக்களுக்காகவே இருக்க வேண்டும் .அவர்களின் செயல்கள் சிந்தனைகள், பொறுப்புகள், எல்லாம் மக்களை நோக்கியே செல்ல வேண்டும் என்பதுதான் பொது வாழ்க்கைக்குள் நுழைவுவர்களுக்கு எழுதப்படாத விதி .

அதை வைத்துத்தான் அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தங்களை மக்களுக்கு சேவை செய்கிறார்கள்.

இந்த அடிப்படைக் கோட்பாட்டுக்குள் அடங்கி மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்து சேர்ந்தான் கரன்

சேவை செய்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி வந்தான் . அவன் ஒரு அமைப்பின் உயர் பதவிக்கு வர நினைத்தான்.

அதில் நிறைய பேர் போட்டி இட்டார்கள்.

கரனும் போட்டியிட்டான். அவன் தன்னை பொதுநலவாதி யாகவும் இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு கடுமையாக உழைத்து சேவை செய்து அவர்களுடைய வாழ்க்கையை முன்னுக்கு கொண்டு வருவேன் என்று சொல்லியும் அந்த அமைப்பில் இருந்தவர்களிடம் ஓட்டுக் கேட்டான்.

அந்த அமைப்பினர்களும் கரன் நன்றாகத்தான் பணி செய்வான் என்று நினைத்து அவனுக்கு ஓட்டும் போட்டார்கள்.

ஓட்டு வாங்கும் வரை தன்னை ஒரு பெரிய சமூக சேவகனாக அந்த அமைப்பினருக்கு சேவை செய்பவனாக நினைத்துக் கொண்டிருந்தவன், காலம் மாற மாற, அவனும் மாறத் தொடங்கினான் .

தேர்தலுக்கு முன்னால் அவன் போன் செய்து தான் மற்றவருடன் பேசுவான்.

உங்க ஓட்டு எனக்கு தான். நீங்க இல்லன்னா, நான் இல்ல. நீங்க எனக்கு ஓட்டு போடுங்க. நான் ஜெயிச்சா உங்களுக்கு நிறைய செய்வேன் என்று பலதரதப்பட்ட வாக்குறுதி வாக்கியங்களை அள்ளித் தெளித்தபடியே இருப்பான்.

காரணம் ஓட்டுப் போட்டால் தான் அவன் ஜெயிக்க முடியும் என்ற நிலையில் இருந்ததால் அவன் எல்லோரிடமும் தனிப்பட்ட முறையில் பேசினான்

ஆனால் இன்று தேர்தல் முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டன. அவன் யாரிடமும் போன் செய்வதில்லை. ஓட்டு போட்டவர்களுக்கு பொத்தாம் பொதுவாக குரூப்புகளில் நன்றி சொன்னானே ஒழிய, ஓட்டு கேட்கும் போது எப்படி ஒவ்வொருவரிடமும் பேசினானாே அதுபோல ஒவ்வொருவரிடமும் பேசி, தன்னை ஜெயித்து வைத்ததற்கு நன்றி என்று சொல்லவில்லை.

இதுதான் அரசியல்வாதிகள் என்று சொல்லிக் கொண்டார்கள் அந்த அமைப்பினர்கள் .

அந்த அமைப்பில் அடிக்கடி விழாக்கள் நடக்கும் . அது இரவு நீண்ட நேரமாக கூட ஆகலாம் அப்படி அந்த அமைப்பில் நடக்கும் விழாக்களில் தலைவர் முதல் செயற்குழு உறுப்பினர்கள் வரை இருப்பார்கள். அத்தனை பேர்களும் பேசி முடித்து , இரவு டின்னருக்கும் ஏற்பாடு செய்வார்கள் .

இப்படி நடக்கும் ஒரு மாதாந்திரக் கூட்டத்திற்கு அன்று இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் கரன் மட்டும் வெளியே வந்து பிரியாணி தீர்ந்துவிடும் என்ற கவலையோடு, ஒரு ஆளுக்கு ஒரு டோக்கன் தான் கொடுத்திருந்தார்கள்.ஆனால் கரண் தன்னுடைய பொய்யான பதவியை பயன்படுத்தி இரண்டு பிரியாணி பாெட்டலங்களை வாங்கி அவனுடைய டூவீலரில் முன் பகுதியில் வைத்தான்.

இதை அந்த அமைப்பின் ஒரு உறுப்பினர் பார்த்து கை காெட்டிச் சிரித்தார்.

எதற்கு இவ்வளவு பிரியாணி? என்று அவர் கேட்க,

சொல்ல முடியாமல் தவித்தான் கரன்

இதை அந்த அமைப்பின் சில பேர் பார்த்து சிலர் உமிழ் நீரை வீதியில் துப்பினர்

இதையெல்லாம் கண்டு கொள்ளாத கரன் பிரியாணியின் வாசனை வராதவாறு அமுக்கி உள்ளே வைத்துவிட்டு நடந்து கூட்டத்திற்கு சென்றான்.

அந்தக் கூட்டத்திற்கு வெளியே இவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இவன்தான் மக்களுக்கு சேவை செய்வதாகவும் தன்னை முழுமை ஈடுபடுத்திக் கொள்வதாகவும் மக்கள் அந்த அமைப்பினர் நலமே பெரிது என்று நினைப்பவனாகப் பேசிக் கொண்டிருந்தான்.

ஆனா பாத்தீங்களா? ரெண்டு பொட்டலம் பிரியாணிய அமுக்கி வைக்கிறான்.

இவனா மக்களுக்கு சேவை செய்றவன்? இவனா மக்களுக்கு பொறுப்பா நடந்துக்கிறவன்?

மக்கள் சாப்பிட்டு மிச்சம் இருந்தால் தானே பொறுப்பில் இருக்கிற சாப்பிடணும் .ஆனா பொறுப்பில் இருக்கிறவன் முந்தி போய் பிரியாணி பாெட்டனத்த பதுக்கி வைக்கிறது. எந்த வகையில் நியாயம்? இதுதான் அரசியல் .சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இருக்காது.

இதில் கரன் விதிவிலக்கல்ல பேசிக்கொண்டார்கள்.

இது எதையும் காதில் வாங்காத கரன்

விழா நடக்கும் இடத்திற்கு சென்று பவ்வியமாக நின்று கொண்டிருந்தான்.

மேடையில் பேசிக் காெண்டிருந்தவர் ,கருணை, உழைப்பு, தியாகம் போன்றவற்றை சொல்லி,

இப்போது கூட தன்னுடைய குடும்பம், பிள்ளைகள், டிபன் சாப்பாடு என்று எதையும் கவனித்துக் கொள்ளாமல் நம் விழாவிற்கு ஓடி வந்த கரனுக்கு இந்த புத்தாடை பொன்னாடை போர்த்துகிறேன் என்று போர்த்தினார் .

கரன் சிரித்துக் கொண்டே சால்வை வாங்கினார்.

சிலர் அவன் செய்கையைப் பார்த்து கேவலமாக சிரித்தார்கள்.

இதுதான் உள்ள குடுத்துட்டு வெளிய வாங்குறது என்று சொல்ல கரனின் நடவடிக்கை பார்த்துச் சிரித்தார்கள்.

இந்த அமைப்பினர்களுக்காக நான், உணவு, உறக்கம் அத்தனையும் துறந்து விட்டு தான் இங்கே வந்திருக்கிறேன்.

என் பசியை விட இந்த அமைப்பில் இருப்பவர்கள் எனக்கு முக்கியம். நான் அந்த இந்த அமைப்பினர்களுக்காக கண்டிப்பாக பாடுபடுவேன். இப்போது கூட எனது வீட்டில் என் மனைவி, குழந்தைகள் உணவு இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

ஆனால் நான் உங்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று பெரிய குண்டைத் தூக்கி போட்டான்.

அவன் பிரியாணி பாெட்டலத்தை ஒளித்து வைத்ததை பார்த்த சிலர் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.

பொதுநலம் பற்றியே பேசிக் கொண்டிருந்தான் கரன்.

அவன் பதுக்கி வைத்திருந்த பிரியாணி பொட்டலத்தின் வாசனையை மோப்பம் பிடித்து ஈக்கள் வர ஆரம்பித்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *