முழு தகவல்

பெண்களுக்கு சொத்துரிமை: தொடக்கமும் தீர்வும்!

பெரும்பாலான நாட்டுச் சட்டங்கள் ஆணுக்குப் பெண் சமம் என்றே கூறுகின்றன. ஆனாலும் சமுதாய சிந்தனை அப்படி இல்லை என்பதுதான் வேதனை. பெண்களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சட்ட மாற்றங்கள் வந்தாலும், அவை சமுதாய மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. இது பெண்களுக்கான சொத்துரிமையிலும் பொருந்தும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, இந்த மண்ணுலகின் மக்கள் தொகையில் பாதி அளவாக இருக்கும் பெண்கள், மூன்றில் இரண்டு சதவிகிதம் வேலை நேரத்துக்குச் செலவிடுகிறார்கள். அதற்கு மாத ஊதியமாக பத்தில் ஒரு பாகம் பெறுகிறார்கள். ஆனால், சொத்துரிமையில் நூறில் ஒரு பாகம் மட்டுமே பெற்றுள்ளார்கள். இந்த அறிக்கை உலகப்பெண்களின் உண்மையான நிலையை பறைசாற்றுகிறது.

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

தந்தை பெரியாரின் முதல் குரல்

பெண்களின் இந்த உண்மையான நிலையை 90 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து, அதற்காக முதல் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் மட்டுமே. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ந்தேதிகளில், தந்தை பெரியார் தலைமையில், செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டில் “ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை வழங்க வேண்டும்” என்று, முதல்குரல் பெரியாரால் எழுப்பப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் விதவை மறுமணம், பெயருக்கு பின்னால் சாதிப் பெயரைத் துறத்தல் உள்ளிட்ட புரட்சிகரமான முடிவுகளும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெண்களின் சொத்துரிமையை அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையாகக் கொண்டு இருக்கும் சட்டமே முடிவு செய்கிறது. இந்தியாவில் பெண்களின் சொத்துரிமை நிலையை சரி செய்ய 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சில சட்டங்கள் இயற்றப்பட்டன. The Hindu Women‘s Rights to Property Act 1937, The Indian Succession Act 1925 போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பதவி வலகிய அம்பேத்கர்!

1937-ல் இயற்றப்பட்ட இந்து பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டமானது, இறந்துபோன கணவனின் சொத்தில் மகனின் காப்பாளர் என்ற முறையில் பெண்களுக்குச் சில உரிமைகளை அளித்தாலும் அவை மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தன. 1941-ல் பிரிட்டிஷ் அரசால் பி.என்.ராவ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சட்டக் குழுவானது, பெண்களின் சொத்துரிமையை நிலைநாட்டுவதற்காகக் கூட்டுக்குடும்பச் சொத்து என்ற கருத்துக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் அளவுக்குச் சென்றது.

சட்டக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கப்பட்ட பிறகு, பி.என்.ராவ் தயாரித்த இந்து சட்டத் தொகுப்பின் வரைவு குறித்து கருத்துகள் கேட்டறியப்பட்டன. கடுமையாக எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக, இந்த வரைவு கைவிடப்பட்டது. 1948-ல் அப்போதைய சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கரால் இந்து சட்டத் தொகுப்பு மீண்டும் மறுவரைவு செய்யப்பட்டது.

மகள்களுக்குச் சொத்தில் பங்கு வழங்கவும், விதவைகளுக்கு முழுமையான சொத்துரிமை வழங்கவும் வகைசெய்த இச்சட்டத் தொகுப்பை அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் அறிமுகப்படுத்தியபோது, மீண்டும் எதிர்ப்புகள் வலுத்தன. அவையில் சட்ட முன்வரைவு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

இந்து பெண்களுக்கான சொத்துரிமை வரலாற்றில் 1956-ல் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டமே ஒரு மிகப் பெரிய திருப்புமுனைதான். முதல் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த ஜவாஹர்லால் நேரு, அம்பேத்கரின் இந்து சட்டத் தொகுப்பை இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து இளவர் மற்றும் காப்பாளர் சட்டம், இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் என்று பகுதி பகுதியாக நிறைவேற்றினார்.

1956-ல் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம், அதற்கு முன்பு நடைமுறையில் இருந்த சமய வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்றாலும், பெண்களின் உடைமையாக உள்ள சொத்துகளின் மீது அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டது. இறந்துபோன தந்தையின் சொத்தில் மகன்களைப் போல மகள்களுக்கும் பங்குண்டு என உறுதிப்படுத்தியது.

இந்து வாரிசுச் சட்டம்-1956

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான். இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு.

அதேநேரத்தில், கூட்டுக்குடும்பத்தின் பூர்வீகச் சொத்தில் மட்டும் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் பாலினச் சமத்துவம் என்பது சட்டரீதியான விதிவிலக்காகவே இருந்தது. பூர்வீகச் சொத்துகளைப் பெறுவதில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைய வேண்டும் என்றும், அதற்காக இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆணையத்தின் 174 அறிக்கை பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், 2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டத் திருத்தங்கள் பெண்களுக்குப் பூர்வீகச் சொத்தில் சம உரிமை வழங்கியதோடு, ஏற்கெனவே இறந்துபோன மகன் அல்லது மகளின் உயிரோடிருக்கும் ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்றன. திருத்தப்பட்ட பிரிவு 30, பெண்களும் உயில் எழுத அனுமதித்தது.

2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது. ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும். கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

மேலும் அறிய… https://tinyurl.com/y3pwlw2t

இஸ்லாமிய, கிறித்தவ பெண் சொத்துரிமை

இஸ்லாமியப் பெண்களைப் பொறுத்தவரை, பெண் என்ற காரணத்துக்காக எப்பொழுதுமே அவர்களை சொத்துரிமையிலிருந்து விலக்கி வைத்தது கிடையாது. இஸ்லாமியச் சட்டத்தில் வாரிசுரிமை மற்றும் மதத்தின் வாரிசுரிமையிலிருந்து வேறுபடுகிறது. இஸ்லாம் மதத்தை பொறுத்த வரை சுயசம்பாத்திய சொத்து, மூதாதையர் சொத்து, பிறப்பின் மூலம் உரிமை பெறும் சொத்து (Coparcenary Property), பாகப்பிரிவினை மூலம் வரும் சொத்து என்பது போல கிடையாது.

இஸ்லாமியருக்கான சட்டம் வெகுகாலம் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்தது. நம் நாட்டை பொறுத்த வரை ஷரியத் சட்டம் (Shariat Act) 1937 அவர்களுக்காகச் செய்யப்பட்ட ஒரு சட்டம். அவர்கள் ஷரியத்தில் குறிப்பிடுவது சட்டமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இஸ்லாமியப் பெண்களைப் பொறுத்த வரை எப்பொழுதுமே ஆண்களுக்கு சமமாக சொத்தில் பங்கு கோர இயலாது. ஒரு ஆண் வாரிசு, இரண்டு பாகம் சொத்தில் பங்கு எடுக்கும் போது, பெண்ணுக்கு ஒரு பாகமே ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்படும் சொத்து அவர்களுக்கு உரிமையோடு ஒதுக்கப்படுகிறது. மேலும், 1956க்கு முன்பு இருந்த இந்துச் சட்டப்படி ‘Women’s Estate’ போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் கிடையாது.

கிறித்துவப் பெண் சொத்துரிமை

கிறித்துவப் பெண்களுக்கு இந்திய வாரிசுரிமை 1956 சட்டத்தின் படி சொத்து குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இச்சட்டத்தின் 36 – 49 பிரிவுகள் கிறித்துவர்களுக்கு பொருந்தும்.

இந்து மற்றும் இஸ்லாமியப் பெண்மணியை ஒப்பிடும்போது, கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் பெண்ணுக்கு மூதாதையர் சொத்து கோரப்படும் உரிமை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பிரிவு 36ன் கீழ் ஒரு கைம்பெண் மற்றும் இதர வாரிசுதாரர் (Kindred, lineal descendant) இருக்கும் பட்சத்தில், இறந்தவரின் சொத்தில் மூன்றில் ஒரு பாகம் கைம்பெண்ணுக்கும், மூன்றில் இரண்டு பாகம் மற்ற நபர்களுக்கும் போய்ச் சேரும்.

அவ்வாறே நேரடி வாரிசுதாரர் (Lineal Descendant) இல்லாமல் தூரத்து உறவு (Distant Kindred) மட்டும் இருக்கும் பட்சத்தில் இரண்டில் ஒரு பாகம் அந்த கைம்பெண்ணின் பாகமாக வரும். மேலும், ஒரு கைம்பெண்ணுடன் இதர வாரிசுதாரர்கள் யாரும் இல்லாத பட்சத்தில்தான் முழுச்சொத்தையும் உரிமை கோர இயலும். ஒரு கிறித்துவக் கைம்பெண்ணுக்கு கிடைக்கும் சொத்து வேறு வாரிசுதாரர்களின் நிலையைப் பொறுத்தே அமைகிறது.

1956 ஆம் ஆண்டு சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் முதன்முதலாக ஒரு இந்துப்பெண்மணி வாரிசுரிமையின் மூலமாகவோ, ஜீவனாம்சத்தின் மூலமாகவோ, உறவினர் மற்றும் உறவினர் அல்லாதவரிடம் இருந்து திருமணத்துக்குப் பிறகு கிடைக்கும் சொத்துகள் மேலும், சொந்த முயற்சியின் மூலம் பொருளீட்டி வாங்கிய சொத்துகள், உயிலின் மூலமாக ஒரு பெண் பெற்ற சொத்துகள் அல்லது ஒரு சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் சொத்துகள் போன்ற அனைத்துச் சொத்துகளும் பெண்களின் முழு உரிமையுடைய சொத்துகளாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பெண் தான் அடையும் அல்லது தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சொத்துக்கு முழு உரிமைதாரர் ஆகிறார்.

மேலும் அறிய… https://tinyurl.com/y26gwh6y

பண்டைய பெண்களின் சொத்துரிமை

பண்டைய தமிழ்ப் பெண்களின்திருமணத்தின்போது பெற்றோர் மணமகளுக்குக் கொடுப்பது சீதனம் எனப்படும். ஒரு கல்வெட்டில் “என் தமக்கைக்குச் சீதனம் வாத்த நிலம்” என்ற குறிப்புக் காணப்படுகிறது. அது கணவன் உரிமையாகிறது. ஆனால் கணவன் இறந்தபின் அவன் சொத்துக்கள் மனைவியையே சேர்கிறது.

பெண்களுக்குச் சொத்துரிமை ஓரளவு இருந்துள்ளது. குந்தவையார், செம்பியன்மாதேவி போன்ற அரச குடும்பத்துப் பெண்கள் மட்டுமல்ல சில வணிகர், வேட்டுவர், வேளாளர் குலப் பெண்களும் கோயிலுக்குக் கொடுத்த கொடை பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. காவலன் குறும்பிள்ளரில் சொக்கன் மனைக்கிழத்தி, வேளாளரில் கண்ணன் மூவேந்தவேளான் மணவாட்டி பெருந்தேவி ஆகியோர் கோயிலுக்குக் கொடை கொடுத்தமை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசராசன் கூட “நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும்” ஆகிய பெண்கள் கொடைகளைத் தன் கல்வெட்டில் குறிக்கின்றான்.

சில இடங்களில் பெண்கள் கொடை கொடுக்கும்போது அப்பெண்ணின் தந்தை அல்லது கணவன் அல்லது சகோதரன் ஆகியோர் அப்பெண்ணிற்காகக் கொடை கொடுத்ததாகக் கூறிக் கொள்கின்றனர். “திருச்சிற்றம்பல தேவனை முதுகண்ணாக உடைய இவன் பிராமணி சாத்தி’’ என்பது ஒரு கல்வெட்டுத் தொடராகும். முதுகண் என்பது பாதுகாவலரைக் குறிக்கும் கல்வெட்டுச் சொல்லாகும். மனைவிக்குக் கணவரும், மக்களுக்குப் பெற்றோரும் பாதுகாவலராகக் (முதுகண்ணாகக்) குறிக்கப் பெற்றுள்ளனர்.

சோழர் காலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவர்களுக்குச் சொத்துரிமை இருந்தது. தங்களது சீதனச் சொத்தின் மீது பெண்கள் ஏகபோக உரிமையைப் பெற்றிருந்தனர்.

பிரிட்டீஷ் கால சட்டங்கள்

திருமணமான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், 187 (Married Women’s Property Act, 1874)

இச்சட்டம் பிப்ரவரி, 24, 1874 அன்று இயற்றப்பட்டது. இதில் 1866, ஜனவரி 1 ம் தேதிக்கு முன் திருமணமான பெண்களின், திருமணத்திற்கு முன்னான கடன்களுக்கு அவர்கள் வைத்திருந்த சொத்தின் மேல் பற்று வைக்கவும், அக்கடன்களில் கணவனுக்கு பங்கில்லை எனவும் சொல்லப்பட்டது. (பிரிவு.8)

இந்து வாரிசு திருத்த சட்டம்-2005

இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப் பிரிவினை கோர முடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

மேலும் அறிய… https://tinyurl.com/yxtt8yzr

1989 ல் தமிழக அரசு சட்டம்

தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்கும்படி திருத்தப்பட்டது. பெரியார் கொள்கை வழியில் வந்தவரான கருணாநிதி, பெரியார் தலைமையில் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு சயமரியாதை மாநாட்டு தீர்மானம் நிறைவேறிய, 60 ஆண்டுகள் கழிந்து 1989ல் பெரியாரின் கனவை நனவாக்கி “பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு” என சட்டமாக்கினார். இந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்டதிருத்தம்) 1989ன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது. நாட்டிலேயே முதல் முறையாக புரட்சிகரமாக இந்த திட்டத்தை கருணாநிதி அரசு கொண்டு வந்தது. பெரியாரின் கனவை, நனவாக்கிய பெருமையை பெற்றார் கருணாநிதி.

இதேபோல, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு அளிக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும் அறிய… https://tinyurl.com/y5cscqfe

உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ‘இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட 2005-ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால் பெண்கள் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்தும் இந்து குடும்பத்தில் பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், 2015 மற்றும் 2018-ல் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் இந்த விவகாரத்தில் சட்டரீதியான கேள்வி எழுந்தது.

இதற்கிடையே டெல்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தநிலையில் 2020 ஆகஸ்ட் 11 ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:-

ஒரு இந்து குடும்பத்தில், அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை இந்து வாரிசு உரிமை சட்டம்-2005 திருத்தத்துக்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு.

ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது என்று உறுதிப்படுத்தியது.

மேலும் அறிய… https://tinyurl.com/y3dschrc

மேலும் “Property Rights of Women: Proposed Reforms under the Hindu Law” என்ற தலைப்பில், சட்ட ஆணையத்தின் 174 வது அறிக்கை பற்றி விரிவாக ஆங்கிலத்தில் அறிய… https://tinyurl.com/y5nnfvon

எழுத்து, தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *